தி.மு.க.வுக்கு எதிராக வரும் 25ந்தேதி அ.தி.மு.க. கண்டன பொது கூட்டம்; முதல் அமைச்சர் அறிவிப்பு

சென்னை, இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற உச்ச கட்ட போர் முடிவுக்கு வந்தது. இந்த போரின் போது, ஏராளமானர் கொல்லப்பட்டனர். மேலும், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.  இதனால், மாயமான நபர்களின் குடும்பத்தினர் பல்வேறு சிக்கல்களை அனுபவித்து வந்தனர்.

இறுதிக்கட்ட போரின் போது சிங்கள ராணுவம் மனித உரிமைகளை மீறி போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகளும், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலும் வற்புறுத்தின. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இலங்கை, வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்காமல் தாங்களே விசாரணை நடத்தப்போவதாக கூறியது.  சர்வதேச விசாரணையை நிறைவேற்ற மேலும் 2 ஆண்டுகள் அவகாசம் இலங்கைக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  தொலைக்காட்சி ஒன்றுக்கு ராஜபக்சே அளித்த பேட்டியில், இலங்கை போரின் போது இந்தியா கேட்காமலே உதவி செய்ய முன் வந்ததாக தெரிவித்துள்ளார். ராஜபக்சே அளித்த பேட்டியில் கூறியதாவது:- “இலங்கையில் நடைபெற்ற யுத்தமானது, இந்தியாவிற்கு எதிரான யுத்தமாகவே காணப்பட்டது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான யுத்த முடிவிற்கு, அனைத்துவித உதவிகளையும் இந்தியா வழங்கியிருந்தது. சீனா, பாகிஸ்தான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை வழங்கின’ என அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை ராணுவத்திற்கு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு உதவிகளை செய்தன என முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே வாக்குமூலம் ஆக தந்துள்ளார்.

இந்த அடிப்படையில், இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரசை தண்டிக்க வேண்டும்.  இன படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை போர் குற்றவாளிகளாக்கி தண்டிக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி தி.மு.க.வுக்கு எதிராக வருகிற 25ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொது கூட்டம் நடத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

-dailythanthi.com

TAGS: