80 வயது பாலோனாவுக்கு அண்மை நாட்களாக தூக்கம் வருவதில்லை. அரசு தங்களுடைய நிலத்தை அபகரித்து விடுமோ என்ற கவலையும் அச்சமும் அவரது நிம்மதியையும், உறக்கத்தையும் அபகரித்துவிட்டது.
புலிகள் வாழ்வதற்காக தங்கள் கிராமத்தை காலி செய்துக் கொண்டு செல்லவேண்டுமென்று அரசு உத்தரவிட்டு அதற்காக 10 லட்ச ரூபாய் இழப்பீடு கொடுத்தாலும் அது அவருக்கு ஏற்புடையதாக இல்லை. வாழ்க்கையில் 10 லட்சம் ரூபாயை அவர் கனவில் கூட பார்த்ததில்லை, என்றபோதிலும், தனது முன்னோர்கள் வாழ்ந்த இடத்திற்கு விலை மதிப்பிட முடியாது என்று கூறுகிறார் பாலோனா.
ஜார்கண்ட் மாநில காடுகளின் நடுவில் அமைந்திருக்கும் விஜய்புர் கிராமத்தில் வசிக்கும் பாலோனாவுக்கு ‘குடுக்’ என்ற பழங்குடியின மொழி மட்டுமே தெரியும்.
“விலங்குகளை வாழ வைப்பதற்காக மனிதர்களை இங்கிருந்து வெளியேறச் சொல்கிறார்கள். இதில் எதாவது நியாயம் இருக்கிறதா? இங்கு எங்கள் முன்னோர்களின் கல்லறைகள் உள்ளன. மாடு, எருமை, கோழி போன்ற வீட்டு விலங்குகளை வளர்க்கிறோம், நாங்கள் வேறு யாருடைய நிலத்தையும் அபகரிக்கவில்லை, வன சரகர்கள், சிப்பாயிகள் என பலதரப்பட்ட அதிகாரிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்தோம். ஆனால், அரசாங்கம் ஏன் எங்களை இங்கிருந்து வெளியேற்ற நினைக்கிறது?” என்று வெகுளியாக கேள்வி கேட்கிறார் அந்த மூதாட்டி.
எட்டு கிராமங்களை அகற்றுவதற்கான முன்மொழிவு
பலாமு புலிகள் சரணாலயம் (Palamu Tiger Reserve) அமைந்திருக்கும் பகுதியில் வாழும் புலிகள் மற்றும் பிற விலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற திட்டத்திற்காக, ஜார்கண்ட் மாநிலத்தின் லாதேஹார் மாவட்டத்தில் உள்ள எட்டு கிராமங்களை காலி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதில், பாலோனாவின் கிராமமும் ஒன்று.
விஜய்பூர் உட்பட ஏழு கிராமங்கள் காரு பகுதியிலும் பர்வாடிஹ் பகுதியில் , ஒரு கிராம்மும் வருகிறது. 1129 சதுர கிலோமீட்டர் அளவில் பரந்திருக்கும் இந்த எட்டு கிராமங்களும், புலிகள் பாதுகாக்கப்படும் சரணாலய பகுதிக்குள் வருகின்றன.
இந்தத் திட்டத்தின்படி, 414 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு முக்கியப் பகுதியாகவும், எஞ்சிய 715 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இடையகப் பகுதி (அடர்த்தியான வனப்பகுதி) எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
லாட்டூ, கோஜ்ரோம், வியஜ்புர், பண்ட்ரா, குடுவா, கோப்கார் மற்றும் பர்வாடிஹ் ஆகிய கிராமங்கள் காரு பகுதியிலும், பர்வாடிஹ் பகுதியைச் சேர்ந்த ரமன்தாஹ் கிராமமும் இடையகப் பகுதிகளில் வருவதால் இந்த எட்டு கிராமங்களும் காலி செய்யப்படவேண்டும்.
இங்கு வசிக்கும் மக்களை குடிபெயரச் சொல்லும் அரசின் முன்மொழிவுக்கு பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோஜ்ரோம் கிராமசபை மட்டுமே இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டுள்ளது, ஆனால் அந்த கிராமத்திலும் தற்போது எதிர்ப்புகள் வலுக்கின்றன.
‘எட்டு கிராமங்கள் என்ற எண்ணிக்கை நாளை பல மடங்கு அதிகரிக்கும்’
பாண்டரா கிராமத்தின் ஜொன்செட் டோப்போ, ரஞ்சித் டோப்போ, ராஜேஷ் குஜூர் மற்றும் விஜய்புரின் ப்யாதுர் குஜூர், பிரான்சிஸா கல்கோ, கோஜோரோம் ஜேவியர், இக்னிஸ் மற்றும் பலர் பி.பி.சியிடம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
காலம் காலமாக இங்கு வசிக்கும் மக்களை இந்த கிராமங்களில் இருந்து வெளியேற்றிவிட்டு பலாமு புலிகளின் சரணாலயத்தை பாதுகாப்பது அவசியமா என்று இவர்கள் கேட்கிறார்கள்.
அரசு அனுப்பிய நோட்டீஸ் மற்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தனது கடிதத்தின் நகலை நம்மிடம் காட்டுகிறார், விஜய்புரின் இகோ மேம்பாட்டுக் குழுவின் தலைவர் டேனியல் திர்க்கி. அங்கிருக்கும் மக்கள் கிராம மேம்பாட்டு அலுவலகத்திற்கு ஊர்வலம் சென்று தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் சமூக செயற்பாட்டாளர் மற்றும் ஜன் சங்கர்ஷ் சமிதி என்ற குழுவின் மத்திய செயலாளர் ஜெரோம் ஜேரால்ட் குஜூர் பிபிசியிடம் பேசுகையில், “இது எட்டு கிராமம் மற்றும் 3100 பழங்குடியினர் சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல. அரசு இந்த திட்டத்தில் மேலும் பல கிராமங்களை இணைக்க விரும்புகிறது. இது பழங்குடியின மக்களுக்கு எதிரான சதி. இதைத் தொடர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.”
அரசு என்ன சொல்கிறது?
பலாமு புலிகளின் சரணாலயத் திட்டத்தின் துணை இயக்குநர் மஹாலிங்கத்திடம் இது பற்றி பேசினோம். இது மத்திய அரசின் ஒரு திட்டம். அதன்படி, எட்டு கிராமங்களை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அரசின் முன்மொழிவுக்கு கிராமசபை ஒப்புக்கொள்கிறதா இல்லையா என்ற கடித்த்தை கொடுக்கவேண்டும். ஒப்புதல் கடிதம் கொடுப்பவர்களின் புனர்வாழ்வுக்கு இரண்டு வழியில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
“கிராமத்தை விட்டு வெளியேறும் குடும்பங்களுக்கு தலா பத்து லட்ச ரூபாய் ஒரே தவணையில் கொடுக்கப்படும். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வசிக்கலாம். இரண்டாவது வழிமுறையின்படி 10 லட்ச ரூபாய்க்கு பதிலாக ஐந்து ஏக்கர் நிலத்தை தரலாம். ஆனால், குடும்பத்திற்கு தலா ஐந்து ஏக்கர் நிலம் கொடுக்கும் அளவுக்கு ஜார்கண்ட் மாநில அரசிடம் நிலம் இல்லை என்பதால், லிஹாஜாவில் பத்து லட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்ற முதல் வழியே கடைபிடிக்கப்படுகிறது.”
“அதிக அளவிலான கிராமங்கள் அரசின் முன்மொழிவை நிராகரிக்கும் கடிதங்களையே எங்களிடம் கொடுத்திருக்கின்றனர். யாரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படமாட்டார்கள். அவர்கள் ஒப்புக்கொண்டால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மஹாலிங்கம் கூறுகிறார்.
இந்த திட்டத்தின் ஆணிவேர் என்ன?
பார்க்கப்போனால், இது ஜார்கண்ட் மாநிலத்தின் பிரச்சனை மட்டுமல்ல. தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் (NTCA) 2017 மார்ச் 28ஆம் தேதியன்று அரசுக்கு வழங்கிய பரிந்துரைகளில், நாட்டின் 18 மாநிலங்களில் 50 புலிகள் திட்டங்களின் பிரதான பகுதிகளில் சில பகுதிகளை சேர்க்கவேண்டும் என்றும் கூறியிருந்தது.
மேலும், இடையகப் பகுதிகளில் இருக்கும் கிராமங்களை காலி செய்வது மற்றும் 2006ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின் கீழ் 2006ஆம் ஆண்டின் வன உரிமைச் சட்டத்தின் கீழ் அங்கு வசிக்கும் கிராமவாசிகளின் உரிமைகளை ரத்து செய்யவேண்டும் என்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.
1972ஆம் ஆண்டின் வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தை உதாரணம் காட்டி, தேசிய புலி பாதுகாப்பு ஆணையத்தின் அப்போதைய காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெனரல் வைபவ் சி. மாதுர் இந்த பரிந்துரைகளை முன்மொழிந்திருந்தார்.
இந்த பரிந்துரைகளை எதிர்த்து சி.பி.ஐ (எம்) தலைவர் பிருந்தா காரத் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். -BBC_Tamil