சிக்னலில் இஞ்ஜினை ஆப் செய்தால், ரூ. 250 கோடி மிச்சம்!

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையி்ல, டிராபிக் சிக்னல்களில், வாகன இஞ்ஜின்களை சில மணித்துளிகள் இயங்கவிடாமல், அணைத்து வைத்தாலே, ரூ. 250 கோடி அளவிற்கு எரிபொருளை சேமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோலியம் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி கழகம் (Petroleum Conservation Research Association(PCRA)) இதுதொடர்பாக, தலைநகர் டில்லியில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வு தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் PCRA நிர்வாக இயக்குனர் அலோக் திரிபாதி கூறியதாவது, டில்லி போன்ற நாட்டின் 100 அதிக பிஸியான சாலைகளில், டிராபிக் சிக்னல்களில் ரெட் சிக்னல், தோராயமாக 120 முதல் 180 வினாடிகள் வரை பயன்பாட்டில் இருக்கின்றன.

ரெட் சிக்னலின் போது, குறைந்த பட்சம் 20 வினாடிகளாவது, நாம் நம் வாகனத்தின் இஞ்ஜினை நிறுத்திவைத்தாலே, டில்லியில் மட்டுமே ரூ. 250 கோடி அளவிற்கு எரிபொருளை சேமிக்கலாம். இந்த உத்தியின் மூலம், எரிபொருள் செலவு மிச்சப்படுவது மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் மாசுபாடும் பெருமளவு தவிர்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான பிரசாரத்தை, மத்திய சாலை ஆய்வு நிறுவனம், டில்லி போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்டு, மக்களுக்கு எரிபொருள் சேமிப்பின் முக்கியத்துவத்தை, சுற்றுச்சூழல் மாசுபாடு குறைப்பு குறித்தும் அறிவுறுத்த வேண்டும் என்று திரிபாதி வேண்டுகோள் விடுதை்துள்ளார்.

-dinamalar.com

TAGS: