டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல் காரணமாக காஷ்மீர் போலீசார் மற்றும் சிறப்பு காவல்படையினர் யாரும் அடுத்த சில நாட்களுக்கு விடுப்பு எடுக்க வேண்டாம், வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் போலீசார் மூவர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாதுகாப்பு கருதி இந்திய ராணுவம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ஏற்கனவே இதனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் நடத்த இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய எல்லையில் தற்போது பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
எத்தனை பேர் மரணம்
போலீசார் மற்றும் சிறப்பு காவல்படையை சேர்ந்த வீரர்கள் தீவிரவாதிகளால் காஷ்மீரில் கடத்தி கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஜனவரியில் இருந்து இப்படி கொலை நடப்பது அதிகமாகி வருகிறது. கடந்த ஜனவரியில் இருந்து மட்டும் சுமார் 37 போலீசார் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
எச்சரிக்கை
இந்த நிலையில்தான் காஷ்மீரில் போலீசார் பதவி விலகி வேண்டும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி நைகோ எச்சரிக்கை விடுத்து இருந்தான். வேலையை விடவில்லை என்றால் கொலை செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தான். இதனால் சில போலீசார் தங்கள் வேலையை விடுவதும் நடந்தது.
தொடர் கொலை
கடந்த வாரம் சரியாக இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் அன்று சிறப்பு காவல்படை அதிகாரி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதன்பின், அடுத்த இரண்டு நாட்களில் மூன்று போலீசார் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். மூன்று பேரும், கழுத்தறுக்கப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
என்ன அறிவுறுத்தல்
இந்த நிலையில் போலீசார் யாரும் இன்னும் சில நாட்களுக்கு வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று ராணுவம் அறிவுறுத்தி இருக்கிறது. வீட்டிற்கு செல்லும், வேலையின்றி வீட்டில் விடுமுறையில் இருக்கும் போலீசார்தான் கொலை செய்யப்படுகிறார்கள். இதனால் போலீசார் யாரும் விடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.