ஆயிரம் கோடி அல்ல.. லட்சம் கோடி.. இந்திய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய ரபேல் டீல்.. என்ன நடந்தது?

டெல்லி: ரபேல் விமானம் வாங்கியதில் மொத்தமாக ரூ.50,000 கோடி இழப்பு இல்லை அதற்கும் அதிகமாக பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

பணமதிப்பிழப்பு, பசுவை வைத்து கொலை செய்தல், என்கவுண்டர், மதப்பிரச்சனை, சர்வாதிகாரம், பாலியல் பிரச்சனை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, டாலர் மதிப்பு, ஜிஎஸ்டி இதில் ஏதாவது ஒன்றுதான் அடுத்த லோக் சபா தேர்தலில் முக்கிய விவாதமாக மாறும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால் கடந்த சில மாதம் முன் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியது ரபேலை பற்றி.

அட ராகுல் ஏன் மக்களுக்கு புரியாத ”ரபேல் ஒப்பந்தம்” பற்றில் ராகுல் காந்தி பேசுகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அந்த ரபேல்தான் தற்போது பாஜகவிற்கு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஆம், இந்திய பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கும் பெரிய உழலாக ரபேல் ஒப்பந்தம் உருவெடுத்து இருக்கிறது.

பிரான்ஸ் உடன் ஒப்பந்தம்

முதலில் இந்த ரபேல் ஒப்பந்தம் என்பது இந்திய விமான படையின் பலத்தை அதிகரிக்க செய்யப்பட இருந்தது. இதன் மூலம் புதிய ரபேல் ரக விமானங்களை வாங்கி ராணுவ பலத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. காங்கிரஸ் அரசின் ஆட்சியில் 2012 தொடக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பல நாடுகள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

எந்த நாடுகள்

அதாவது அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மற்ற நாடுகளை விட குறைந்த விலையில் விமானம் தருவதாக பிரான்ஸ் கூறிய காரணத்தால் இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே இந்த விமானம் வாங்க Dassault என்ற பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்தும் ஒப்பந்தம் மட்டும் கையெழுதக்காமல் இருந்தது. இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டு பாஜக ஆட்சியில்தான் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது.

என்ன திட்டம் இருந்தது

காங்கிரஸ் ஒப்பந்தத்தின் படி, மொத்தம் 126 விமானங்களை இந்திய அரசு வாங்க இருந்தது. அதில் 18 விமானங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படும். மற்ற 108 விமானங்கள்உதிரி பாகங்களாக அனுப்பப்பட்டு இந்தியாவில் உருவாக்கப்படும். இதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். Dassault என்ற நிறுவனம்தான் இந்த விமானங்களை இந்தியாவிற்கும் அளிக்கும்.

என்ன ஒப்பந்தம்

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின், 126 விமானங்களை வாங்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. விலை அதிகமாக இருக்கிறது என்று கூறி, வெறும் 36 விமானங்களை மட்டும் வாங்குவோம் என்றும், பிரான்ஸ் விமான தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இப்போது என்ன

பாஜக பிரான்ஸ் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஒரு விமானத்திற்கு ரூ.351 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. மொத்தமாக 36 விமானம் வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மொத்தம் 12,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதவாது பாஜக வேண்டுமென்று அதிக விலைக்கு விமானங்களை வாங்கியுள்ளது. 126 விமானத்திற்கு பதில் 36 விமானம் மட்டுமே வாங்கப்பட்டு இருப்பதால், சரியான இழப்பு 50 ஆயிரம் கோடி ரூபாய் வரும் என்று கூறப்படுகிறது.

குறைவான விமானம்

காங்கிரஸ் ஆட்சியின் போது 126 விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தின் முடிவில் பாஜக மூலம் இப்போது 36 விமானங்கள் மட்டுமே வாங்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கூறிய விலைக்கு வாங்கி இருந்தால் மொத்தமாக 126 விமானங்களை ரூ 41,212 கோடிக்கு வாங்கி இருக்கலாம். ஆனால் இப்போது 36 விமானங்களை வாங்கவே 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது. இதனால் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

வெளியநாடுகளில் என்ன

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மூன்றாம் உலக நாடுகளுக்கு பிரான்ஸ் விமானங்களை கொடுத்த விலையை விட அதிக விலைக்கு இந்தியா வாங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு எகிப்த், கத்தாருக்கு விற்கப்பட்ட போது இதே விமானம் ரூ.1,319.80 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பாஜக பிரான்ஸ் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது.

பங்குதாரர்

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இன்னொன்று இருக்கிறது. அதவாது Dassault நிறுவனம் இந்தியாவிற்கு விற்கும் 108 உதிரி பாக விமானங்களை இந்தியாவில் வைத்து தயாரித்து முழு விமானமாக மாற்றுவார்கள். இதற்கான ஒப்பந்தம் டிஆர்டிவோ எனப்படும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்திற்கும், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகள் என்ற பொதுத்துறை நிறுவனத்திற்கும் அளிக்கப்பட கையெழுத்தானது. இதனால் அந்த தொழில்நுட்பம் இந்திய அரசுக்கு கிடைக்கும். இதனால் சில வருடங்களில் நாமே ரபேல் விமானத்தை உருவாக்க முடியும்.

கைமாறியது

ஆனால் பிரதமர் மோடி வந்த பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி, பங்குதாரர்கள் கைமாறி இருக்கிறார்கள். மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகள் நிறுவனம் இரண்டும் இதில் இருந்து நீக்கப்பட்டு அங்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதற்காக எத்தனை கோடி கைமாறியது என்று யாருக்கும் தெரியவில்லை.

எப்படி கொடுக்கலாம்

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகள் நிறுவனம் இரண்டும் பாதுகாப்பு துறையில் பல காலமாக இருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் இதில் கால் வைத்தது கூட இல்லை. இப்படி இருக்கையில் அனுபவமும் இல்லாத, அதுவும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு, அதுவும் ரகசிமாக ஒரு ராணுவ ஒப்பந்தத்தை கொடுக்க காரணம் என்ன என்று கேள்வி எழுந்து இருக்கிறது. இதுதான் இந்திய அரசியலை ஆட்டிப்படைக்க போகும் அந்த ஊழலாக இருக்க போகிறது.

பெரிய பிரச்சனை

இந்த விஷயத்தை பாஜக எப்படி எதிர்கொள்ள போகிறது என்று தெரியவில்லை. இதில் பல லட்சம் கோடிகள் கைமாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் இழப்பு என்பது 50 ஆயிரம் கோடி வரை இருக்கும், ஆனால் ஊழல் என்பது பல லட்சம் கோடி வரை நடந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சில திடுக்கிடும் தகவல்களை காங்கிரஸ் ”கசிய” வைக்க போகிறது என்றும் தகவல் வெளியாகிறது.

tamil.oneindia.com

TAGS: