கண்ணுக்கு எட்டிய தொலைவில் நல்ல தலைவர்களே இல்லையே. தத்தளிப்பில் தமிழகம்!

சென்னை: நம்மை வழிநடத்தக்கூடிய தலைவர்கள்தான் யார் இப்போது?

தமிழ்நாடு நிலை ரொம்ப மோசமாக இருக்கிறது. மாநிலம் ஒரு கட்டுக்கோப்பிற்குள் இல்லை. ஒரு வரைமுறைக்குள் இல்லை. தடி எடுத்தவன் தண்டல்காரன், சித்தம்போக்கு சிவம் போக்கு!

தனது சுய ஈகோ திருப்தியடைந்தால் போதும் – மக்களும் மற்றவர்களும் எப்படி பாதித்தாலும் எவ்வளவு பாதித்தாலும் கவலை இல்லை என்ற இறுமாப்பின் ஆளுகை அளவுக்கு அதிகமாக நிலவுகிறது. பதவியை தக்க வைத்து கொள்ள எதையும் செய்ய தயாராக இருக்கும் சுயநலங்கள் பெருகி வருகின்றன.

கரையும் மனித நேயம்

சத்தியத்தின் தேடல், சமுதாய மாறுதலிகளுக்கான முயற்சி – சனாதான மக்களின் கண்ணீரை துடைக்க நினைக்கும் மனித நேயம் எல்லாமே கரைந்து காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. தனக்கு என்ன கிடைக்கும்? தன் பெண்டு பிள்ளைகளுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் எவ்வளவு தேறும்? குறுக்கு வழியில் சுலபமாக பதவியை பிடிப்பது எப்படி? பதவியை வைத்து சொத்தை குவிப்பது எப்படி? என்ற எண்ணங்கள் வலுவடைந்து கொண்டிருக்கின்றன.

கக்கன்-கலாம்

அப்துல்கலாம் மாதிரி – அன்னை தெரசா மாதிரி – விவேகானந்தர் மாதிரி – வினோபா மாதிரி -, காமராஜர் மாதிரி – கக்கன் மாதிரி வேறு யாரும் தோன்ற மாட்டார்களா என்ற ஆதங்கம் இப்போது அடிக்கடி வந்து செல்கிறது. நம்மை ஆண்ட மறைந்த தலைவர்கள் எல்லோருமே ஏதோ ஒன்றில் நம்மை கட்டி இழுத்து போட்டு வந்துதான் ஆட்சி புரிந்தார்கள். காரணம், அவர்களது கொள்கையா, நம்பிக்கையா, துணிச்சலா எதுவென்று குறிப்பாக சொல்ல தெரியவில்லை. ஏன் அந்த தலைவர்களின் ஒற்றை வார்த்தைகளில் கூட நாம் சுருண்டு கிடந்திருக்கிறோம்.

சாதுர்ய அரசியல்

அப்பேர்பட்ட ஜாம்பவான்கள் கோடிக்கணக்கான தமிழர்களை கட்டுப்படுத்தியிருந்தனர். நாமும் கட்டுண்டு கிடந்திருக்கிறோம். மறைந்த தலைவர்கள் எல்லோருமே சகிப்புத்தன்மை நிறைந்தவர்கள். கடந்த கால தமிழக வரலாற்றில் மாநிலத்தை ஆண்ட தலைவர்கள் தமிழகத்தில் உருவாகியிருந்த- உருவாக இருந்த வெறுப்பு அரசியலுக்கு எதிர்நிலையான ஒரு செயல்பாட்டைதான் கையாண்டார்கள். அப்படிப்பட்ட ஒரு அபாயகரமான அரசியலை துணிச்சலுடன், சாதுர்யத்துடன், கண்ணியத்துடன்தான் கடந்து வந்தார்கள்.

இன, மத வெறி அதிகரிப்பு

ஆனால் இப்போதைய நிலைமை அப்படியா இருக்கிறது? அரசியல் தலைவர்கள் என்ன பேசுகிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறாரகள் என்றே புரியவில்லை. ஆளும் தரப்பில் அமைச்சர்களின் பேச்சு நாளுக்கு நாள் நகைச்சுவையை கூட்டி கூட்டி அப்பதவியின் மதிப்பிழக்க செய்யும் நிலைக்கு ஆளாகி வருகிறது. இன்னொரு கட்சியில் அளவுக்கு மீறிய பொறுமை, பக்குவம் என்ற பெயரில் மெத்தனம் நிலவுகிறது. இதற்கு நடுவில் இனவெறியை தூண்டி விட்டு அரசியல் நடத்துபவர்களும் உண்டு. இவர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சனை போதாதென்று ஈழத்தையும் உடன் இழுத்து வந்து அரசியல் செய்கிபறார்கள்.

நடிகர்கள் பட்டாளம்

இல்லையென்றால் சாதியை அப்பட்டமாக முன்னிறுத்தி அரசியல் செய்கிறார்கள். இதுவும் போதாதென்று வெறும் “பிரபலம்” என்ற தகுதியை வைத்துக் கொண்டு நடிகர்கள் பட்டாளம் இறங்கி கொண்டிருக்கிறது. இதில் ஒருவர் நான் அரசியல் கட்சி தொடங்கினால் கெட்டவர்களுக்கு இடம் இல்லை, போர் வரட்டும் என்கிறார், சரி, அரசியல் கட்சி ஆரம்பிக்கிறீர்களா என்று கேட்டால் தேர்தல் வரட்டும் சொல்கிறேன் என்கிறார். இன்னொருவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டேன், ஸ்டிரைட்டா நாடாளுமன்ற தேர்தல்தான் என்கிறார்.

மூட்டைகளாக பிரச்சனைகள்

இதுபோக தமிழகத்தின் அதிகாரமிக்க குடும்பத்தில் இருந்து எத்தனை பேர்தான் அரசியலுக்கு வருவார்களோ, போட்டியிட போவார்களோ நமக்கு இன்னும் இதற்கு விடை தெரியாது. இவர்கள் எல்லாம் நாளைக்கு தேர்தலில் போட்டியிட்டால் இந்த நாடு என்னாவது, நாம் என்னாவது? இவர்களிடமிருந்து எப்படி தப்பித்து பிழைத்து எங்கு ஓடுவது? மறைந்த தலைவர்களின் அருமை இவர்களை பார்க்கும்போதெல்லாம் கண்முன் வந்து வந்து செல்கிறது. எவ்வளவு நாசூக்காக ஒவ்வொரு அரசியலையும் அவர்கள் கையாண்டார்கள்!! ஆனால் தமிழ்நாட்டில் இப்போது பிரச்சனைகள் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கிறது.

யாரை பின்பற்றுவது?

தேசிய தலைவர்களை தங்கள் வீடு தேடிய வரவழைத்த தலைவர்கள் இன்று இல்லை. தங்களது சாதுர்யம் கலந்த சகிப்புத்தன்மையை நாடு முழுவதும் பரவ விட்ட தலைவர்கள் இன்று இல்லை. தேசிய அரசியலை மாற்றக்கூடிய அளவிற்கு தங்கள் செல்வாக்கை தமிழகத்திலிருந்தே விரிவுபடுத்திய தலைவர்கள் இன்று இல்லை. மற்றவர்கள் பின்பற்றி வாழக்கூடிய அளவிற்கு நமக்கு சான்றோர் பெருமக்கள் யாரும் தற்போது இல்லை. இளைஞர்கள் தங்களை ஆரோக்கியமாக வார்ப்பித்துக்கொள்ள யாரை பின்பற்றுவது என்று தெரியவில்லை.

ஒரு வெங்காயமுமில்லை

தமிழனுக்கென்று எந்த ஒரு தனி குணமுமில்லை. தந்தை பெரியார் பாஷையில் சொல்வதானால் ஒரு வெங்காயமுமில்லை… எல்லாமே வாய்ச்சவடால்… சட்டமும், நீதியும், சமூக தர்மமும் வெறும் அலங்கார சொற்களே தவிர அது ஒரு அடிப்படை நியதியாகவோ – உண்மையின் உறைவிடமாகவோ இல்லை என்பது தமிழகத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் அப்பட்டமாக அம்பலமாகியிருக்கிறது.

இளைய சமுதாயம் கிளர்ந்தெழும்

நம்மை கட்டிப் போட்டு அரசியல் செய்யும் எந்த அரசியல் கட்சி தலைவர்கள் ஆனாலும் சரி, சமூகத்தின் மீதோ, மக்கள் மீதோ அக்கறையில்லாமல் இருந்தால், நாளை ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமும் ஆவேசத்தோடு கிளர்ந்தெழும். இவர்களின் அநியாய அக்கிரமங்களுக்கு இறுதியில் இளைஞர்களே முடிவு கட்டுவார்கள். தமிழகத்தில் அந்த அவலம் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசியவாதிகளிடமும் ஆட்சியாளர்களிடமும்தான் இருக்கிறது.

tamil.oneindia.com

TAGS: