திருமணமான ஓர் ஆண் திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுவரை, பாதிக்கப்பட்ட கணவர் புகார் அளித்தால் அவரது மனைவியுடன் உறவில் இருந்த ஆணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிலை இருந்தது.
இதுபோன்ற உறவுகளில் ஈடுப்பட்டால் ஆண் பெண் ஆகிய இருவருமே குற்றம் செய்திருந்தாலும் ஆணுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது என்ற அம்சத்தில் அடிப்படையில் குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 497-ஐ எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இத்தாலியில் வசிக்கும் ஜோசஃப் ஷைன் என்ற வெளிநாடுவாழ் இந்தியர் 2017 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 497க்கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
- திருமணத்துக்கு வெளியே உறவுகொள்ளும் பெண் குற்றவாளியா? பாதிக்கப்பட்டவரா?
- மாதவிடாய் மன அழுத்தம்: கணவர்களுக்கும் காதலர்களுக்கும் ஓர் எச்சரிக்கை
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கு மீதான தீர்ப்பை வழங்கியது.
இந்த வழக்கில், திருமணத்துக்கு வெளியே கொள்ளும் உறவை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பில், “கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் சரிசமமாக பொருந்தும். பெண்ணுக்கான பாலியல் தன்னுரிமையில் சமரசம் செய்ய முடியாது.”
“இது ஆணாதிக்க சமூகத்தின் வெளிபாடு. எந்த நிபந்தனையும் பெண்ணிற்கு மட்டும் விதிக்க முடியாது. ஆண் மட்டுமே தூண்டுதல் சக்தியாக இருப்பதாகவும் அதற்கு பெண் பலியாவதாகவும் கருத முடியாது,” என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
இந்த பிரிவே அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறி உள்ளனர்.
நீதிபதி சந்திரசூட் பெண்களை கணவரின் உடமையாக கருதுவது பெண்களின் உரிமையை சிதைக்கும் என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி இந்து மல்ஹோத்ரா பாரபட்சமான இந்த சட்டப்பிரிவு சட்டத்தில் இடம்பெறக் கூடாது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
“சுயமாக முடிவெடுக்கும் உரிமை பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், ஆண்களை மட்டுமே தண்டிக்கும் இந்த சட்ட நடைமுறையைப் பயன்படுத்தி, தனியுரிமையில் அரசு தலையிடும் வழக்கம் முடிவுக்கு வருகிறது,” என அவர் தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
வழக்கு பின்னணி
முன்னதாக இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு, ‘அடல்ட்ரி’ சட்டப்பிரிவில் மாற்றங்களைச் செய்தால் அது சட்டத்தை நீர்த்துப்போக செய்துவிடும், சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி இருந்தது.
இதுபற்றி முன்னர் கருத்து கூறி இருந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கருணா நந்தி, “இந்த வழக்கின் முடிவு மேலும் பல வழக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். திருமண உறவில் பாலியல் பலாத்காரம், திருமணமான தம்பதிகளாக இருந்தாலும், இருவரின் சம்மதத்தோடுதான் பாலியல் உறவு கொள்ளவேண்டும்” என்று கூறி இருந்தார்.
“அதேபோல, சட்டப்பூர்வ வயது வந்த இருவர், தம்பதிகளாக இல்லாவிட்டாலும் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டால், அதற்கு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படக்கூடாது” என்று கோரப்பட்டு இருந்தது.
1860ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வயது வந்தோர் சட்டம், சுமார் 157 ஆண்டு பழையது. இச்சட்டத்தின் கீழ், ஆண் ஒருவர், வேறொரு திருமணமான பெண்ணின் சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டிருந்தால், அந்த பெண்ணின் கணவர் இதுகுறித்து புகார் அளித்தால், முறையற்ற உறவு சட்டத்தின் கீழ், பாலியல் உறவு கொண்ட ஆண் குற்றவாளியாக கருதப்படுகிறார். குற்றம் உறுதி செய்யப்பட்டால் ஐந்தாண்டு சிறை தண்டனை அல்லது அபராதம், சில சமயங்களில் சிறை தண்டனையும் அபராதமும் சேர்த்து வழங்கப்படும்.
இப்போது இந்த தீர்ப்பு இதனை மாற்றி அமைத்துள்ளது. -BBC_Tamil