பாகிஸ்தானுடன் எப்படி பேச்சு நடத்த முடியும்? – ஐ.நா. கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் கேள்வி

நியூயார்க், ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம், நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று அதில் பேசினார். அவர் பேசியதாவது:-

பாகிஸ்தானுடனான பல சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பேச்சுவார்த்தைதான் உரிய வழி என்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த எத்தனையோ தடவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஆனால், அந்த பேச்சுவார்த்தை திடீரென நின்றுவிட்டது என்றால், அதற்கு பாகிஸ்தானின் நடத்தைதான் காரணம். ஆனால், இந்தியா அமைதி முயற்சியை சீர்குலைப்பதாக பாகிஸ்தான் பொய் சொல்லி வருகிறது.

உதாரணமாக, பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றவுடன், எங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று யோசனை கூறினார். அதை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது.

இந்தியா ஏற்றுக்கொண்ட சில மணி நேரத்தில், 3 இந்திய வீரர்களை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் கொன்றனர். இது, பேச்சுவார்த்தைக்கான விருப்பத்தை காட்டுகிறதா?

இதுபோல், நான் 2016-ம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு நேரில் சென்று பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்தேன். ஆனால், பதான்கோட் விமான தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இத்தகைய ரத்த ஆறுக்கிடையே எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொலை செய்யும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் புகழுகிறது. அப்பாவி மக்களின் ரத்தத்தை பார்க்க மறுக்கிறது. அந்த நாட்டுடன் எப்படி பேச்சு நடத்த முடியும்?

தனது குற்றத்தை மறைக்க இந்தியா மீது பழிபோடுவது பாகிஸ்தானின் வழக்கமாகி விட்டது என்று சுஷ்மா சுவராஜ் பேசினார்.

-dailythanthi.com

TAGS: