சபரிமலை தீர்ப்பு இந்துக்களுக்கு மட்டுமா?

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சபரிமலை கோவில் குறித்து சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பில், பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு, தன் நிலையை தாண்டியதாகவே கருத வேண்டி உள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு தேவையான சமநிலை மற்றும் கட்டுப்பாட்டுடன் அவர்கள் செயல்படவில்லை. இந்த வழக்கில் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டுமே சமநிலை மற்றும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டுள்ளார். இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான கோவில்கள், மசூதிகள், குருத்வாராக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தங்களுக்கு உரிய தனித்துவமான வழிபாட்டு முறைகள் மற்றும் நடைமுறைகளை கொண்டுள்ளன. இதில் நீதித்துறை தலையிடுவது மிகப்பெரிய, கடந்து போக முடியாத பிரச்னைகளை ஏற்படுத்தி விட கூடும்.

சபரிமலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, ‘பண்டோரா பாக்ஸ்’ என்று அழைக்கப்படும் அதிகப்படியான தீமைகள் உருவாக காரணமாகி விட்டது. இதன் மூலம் சுப்ரீம் கோர்ட் ஆபத்தான, எதிர்பாராத மிகையான செயல்பாட்டு பாதைக்கான முன் உதாரணமாகி விட்டது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் 1930ம் ஆண்டு நடந்து கொண்ட விதம் மூலம் ஏராளமான பிரச்னைகள் ஏற்பட்டன. சபரிமலை தீர்ப்பு அதை நினைவுப்படுத்துவதை போல உள்ளது.

மசூதிகள் நிலை என்ன?

சபரிமலை தீர்ப்பு, மசூதிகளுக்கும் பொருந்தும் என சுப்ரீம் கோர்ட் இனிமேல் கூறுமா? நாட்டில் உள்ள மசூதிகளில் 1 அல்லது 2 சதவீத மசூதிகள் தான், முஸ்லிம் பெண்களை அனுமதிக்கின்றன. மற்றபடி, முஸ்லிம் பெண்கள் வீட்டில் தான் தொழுகை செய்ய வேண்டும். இந்த கட்டுப்பாட்டுக்கு எழுத்துபூர்வமான உத்தரவு ஏதும் இல்லை. ஆனால், நடைமுறையில் அப்படி தான் உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் நடைமுறையை தான் கணக்கில் கொள்ள வேண்டும். மசூதிகளில் போதிய இடவசதி இல்லை. அதனால் பெண்களுக்கு அனுமதி அளிப்பது இல்லை என பல முஸ்லிம்கள் கூறுவார்கள்.

சூழ்நிலை அப்படி இருந்தால், பெண்களுக்கு முதலிடம் கொடுத்து அவர்கள் மசூதிகளுக்கு உள்ளேயும், ஆண்கள் வெளியேயும் தொழுகை செய்யலாமே. அல்லது, பெண்களுக்கு மசூதிகளுக்குள் நுழைய 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தலாமே? சபரிமலை தீர்ப்பு என்பது இந்துக்களுக்கு மட்டுமானது என இருக்க கூடாது. இவ்வாறு மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

-dinamalar.com

TAGS: