சென்னை: “திருடவனங்க, கடத்தனவங்க எல்லாம் சிலைகளை ஒழுங்கா அவங்க அவங்களே கொண்டு வந்து கொடுத்துட்டா, நல்லது!! இல்லாட்டி ஜெயில்தான்!” என்று சிலைத் திருட்டுப் பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் வெகு சாதாரணமாக நடந்து கொண்டிருந்த சிலை கடத்தல் சமாச்சாரத்தை பொன் மாணிக்கவேல் தீவிரமாக கையாண்டு வருகிறார்.
திடீர் திடீர் ஆய்வுகள்
சிலை கடத்தல்காரர்களை கைது செய்தும் வருகிறார். மூலை முடுக்குகளில் சோதனைகள், விசாரணைகள், திடீர் திடீர் ஆய்வுகள் என தமிழகத்தையே ரவுண்டு கட்டி அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.
விரிவடையும் விசாரணை
கடத்தலை ஒழித்து கட்ட நடத்தப்படும் ஆய்வுகளில் கோயிலாவது, அரண்மனையாவது? எல்லாமே ஒன்றுதான் இவருக்கு. தற்போது கிண்ட கிண்ட புதையல்போல சிலைகளும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இந்த கடத்தல்களின் தொடர்புகள் இன்னும் நீளும் போல உள்ளது, விசாரணைகளும் விரிவடையும் போல தெரிகிறது. சாமிகளை கடத்தும் பிரபல ஆசாமிகளும் மாட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மாதம் டைம்
எனவேதான் ஒரு எச்சரிக்கையை பொன்.மாணிக்கவேல் சற்று காட்டமாகவே இன்று தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிலைகள் வாங்கியவர்கள் அவர்களாகவே முன்வந்து ஒப்படைத்தால் நல்லது. எந்த சட்ட சிக்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம். வேண்டுமானால் ஒரு மாதம் டைம் தருகிறோம். ஒரு மாதத்திற்குள் சிலைகளை ஒப்படைத்துவிட்டால் அவர்களுக்கு தண்டனை இல்லை. ஒரு வருஷம் கழித்து ஒப்படைத்தாலோ, அல்லது மாட்டிக் கொண்டாலோ, ஜெயில்தான்” என்று சொல்லி இருக்கிறார்.
ஒப்படைப்பார்களா?
பொன்.மாணிக்கவேலின் இந்த அறிவிப்பினால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் முன்வந்து சிலைகளை ஒப்படைப்பார்களா? அல்லது தங்கள் தவறுகளை மனமுவந்து நேர்மையாக ஒப்புக் கொள்வார்களா? அல்லது வழக்கம்போல் பொன். மாணிக்கவேல் அதிரடியில் இறங்கிதான் குற்றவாளிகளை பிடிப்பாரா என்பதை இனிதான் பார்க்க வேண்டும்!!
-tamil.oneindia.com