பந்தளம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு, கேரளா அரசு தயாராகி வரும் வேளையில் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டனர்.
சபரிமலை சீசன் துவங்க இன்னும் ஒரு மாதமே உள்ளதால் பெண் பக்தர்களுக்கான வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய உள்ளதாகவும், தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய போதில்லை எனவும், தீர்ப்பை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை எனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன் பஜனை பாடல்களை பாடியபடி, சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். பிரம்மாண்ட பேரணிகளும் நடத்தப்பட்டது.
ஆம்புலன்ஸ், நோயாளிகளை கொண்டு செல்லும் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களை மறித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இடுக்கியை சேர்ந்த பெண் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுவாமி ஐயப்பனை விட கோர்ட் உத்தரவு பெரிதல்ல எனவும், மத நம்பிக்கைகளை பாதுகாக்க மத்திய- மாநில அரசுகள் முன்வர வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். கொல்லம், ஆழப்புழா, பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல, இதிலும் சுமார் 50 ஆயிரம் பேர் திரண்டுள்ளனர்.
கோர்ட் உத்தரவுப்படி பெண்களை அனுமதித்தால் இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்க திருவாபரணங்களை பந்தள அரண்மனை வழங்காது என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை பந்தள அரண்மனை நிர்வாக சங்கம் மறுத்துள்ளது.
-dinamalar.com