குமரியில் பதட்டம்… கடலுக்குப் போன 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை!

கடலூர்: கனமழையில் பல்வேறு பகுதிகளில் நடுக்கடலில் மாட்டிக் கொண்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் தவித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இனிமேலும் பயங்கரமான மழை பெய்யும் என்பதால் ரெட் அலார்ட் என்ற அறிகுறியுடன் அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

ஆனால் தமிழகத்தில் மழைக்கு அதிகமாக பாதிக்கப்படுவதில் கடலூர் மாவட்டமும் ஒன்று. கோரத்தை காட்டி சென்ற ஒக்கி புயலால் அந்த மாவட்ட மக்கள் பட்ட துயரம் கொஞ்சநஞ்சமல்ல.

ஒரு வாரம் ஆகும்

இங்கு பிரதான தொழிலே மீன்பிடிதான். ஒருமுறை மீனவர்கள் கடலுக்கு சென்றால் ஓரிரு நாளில் திரும்ப முடியாது. குறைந்தது ஒரு வாரம், 10 நாள் கூட ஆகிவிடும். ஆழ்கடலில் தங்கிதான் மீன்பிடிக்க நேரிடும். அதேபோல ஒருவர், இருவர் என தனித்தனியாகவும் மீன்பிடிக்க கிளம்ப முடியாது. குறைந்தது 10 பேராவது ஒரு படகில் இருப்பார்கள்.

அறிவிப்பு சேரவில்லையா?

இப்படித்தான் போனவாரம் கடலூர் மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க 30-க்கும் மேற்பட்டோர் சென்றிருக்கிறார்கள். இவர்கள் கடலுக்கு சென்ற நேரத்தில்தான் அரபிக் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இந்த அறிவிப்பு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு சரியான முறையில் போய் சேரவில்லையென கூறப்படுகிறது.

அச்சத்தில் மக்கள்

இதனால் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நடுக்கடலில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களின் கரைக்கு திரும்பி வரவழைக்க தகவல் அனுப்பப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. என்றாலும் 30-க்கும் மேற்பட்டவர்களின் நிலை குறித்து மாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

6 மீனவர்கள் மாயம்

இதேபோல, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை கடலோர காவல் படையினர் படகுகளில் சென்று தேடி வருகின்றனர் தமிழகம் முழுவதும் மொத்தமாக ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மாயமாகி உள்ளதாலும் அவர்களை பற்றி தகவல் ஏதும் இல்லாததாலும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி சக மீனவர்களும் சோகத்தில் உள்ளனர்.

1000 பேர் கதி?

கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது. புயல் குறித்து அரசு விடுத்த எச்சரிக்கை மீனவர்களுக்கு போய் சேராததால் இந்த மாவட்டத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. மீனவர்களின் நிலை குறித்து அறிய ராணுவம், கப்பல் படை, மீன்வளத்துறை மூலம் தகவல் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: