பொருளாதார தடைகள் விதிப்பதான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் இருந்தாலும், நிலத்தில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் S-400 ரக ஏவுகணைகளை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது ஒரு வான் பரப்பு பாதுகாப்பு அமைப்பாகும்.
இந்திய தலைநகர் புதுடெல்லிக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் முன்னிலையில் ஐந்து பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெச்கோவ் தெரிவித்தார்.
- ஆயுதங்கள் தவிர ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்க உள்ள பொருட்கள் எவை?
- சீனாவின் பட்டுப்பாதை திட்டம்: உலகை ஆளுமைப்படுத்தும் உள்நோக்கமா?
ரஷ்யா, இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தராக இருந்தாலும், ரஷ்யாவுடன் பாதுகாப்புத் துறை வர்த்தகம் செய்யும் நாடுகளும் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவுக்கு சிறப்பு விலக்கு கிடைக்கும் என்று நம்புவதாகவும், சீனாவின் ஆயுத பலம் அதிகரித்து வருவதால், தனது ஆயுதங்களை நவீனப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் இந்தியா கூறுகிறது.
புதினின் இந்தப் பயணத்தின்போது புதிதாக ஆறு அணு சக்தி திட்டங்கள் தொடங்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது இந்தியா.
உலகிலேயே மிக நவீனமான நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளில் S400 அமைப்பும் ஒன்று. 400 கிமீ தூரம் பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கவல்ல இந்த அமைப்பு ஒரே நேரத்தில் 80 இலக்குகளை தாக்கி வீழ்த்த வல்லது. இந்தியாவின் அண்டை நாடான சீனாவிடம் இந்த ஏவுகணை அமைப்பு உள்ளது.
இது அமெரிக்கா இந்தியா மீது தடைகள் விதிக்குமா?
இது பற்றி கேட்டபோது, ஐ.டி.எஸ்.ஏ. என்ற ஆய்வு அமைப்பை சேர்ந்த ராஜீவ் நயன் என்ற பாதுகாப்புத் துறை வல்லுநர் இந்தியா யோசித்து இந்த இடர்பாட்டை தேர்வு செய்துள்ளது என்று பிபிசியிடம் கூறினார். இந்தியாவுக்கு இத்தகைய ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு மிகவும் அவசியத் தேவை. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால், தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா கூறியது. ஆனாலும் இந்தியா இந்த அழுத்தத்துக்கு அடிபணியவில்லை என்றார் அவர்.
இத்தகைய தடைகளில் இருந்து சில நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விலக்கு அளிக்க முடியும். ஆனால், அமெரிக்க அதிகாரிகள் கூறிவரும் கருத்துகள் மாறுபட்ட சமிக்ஞைகளை வெளிப்படுத்துகின்றன.
S 400 ரக ஏவுகணைகள் எவ்வாறு செயல்படும்?
- தொலை தூர கண்காணிப்பு ரேடார்கள், பொருட்களை கண்காணிப்பதோடு, தகவல்களை கட்டளை வாகனத்திற்கு அனுப்பும். அதனை வைத்து கட்டளை வாகனம் இலக்குகளை மதிப்பீடு செய்யும்.
- இலக்கை அடையாளம் கண்டவுடன், கட்டளை வாகனங்கள் ஏவுகணைகளை செலுத்தும்.
- ஏவுதல் தொடர்பான தரவுகள் ஏவு வாகனத்துக்கு அனுப்பப்பட்டு, வானில் ஏவுகணைகள் செலுத்தப்படும்.
- மற்றொரு ரேடார், ஏவுகணைகள் இலக்கை நோக்கி பயனிக்க உதவி செய்யும். -BBC_Tamil