‘கிர்’ சிங்கங்கள் தொடர்ந்து உயிரிழப்பு: காரணம் என்ன?

கிழக்கு ஆஃப்பிரிக்காவில் இருந்த சிங்கங்கள் 30 சதவீதம் இறக்கக் காரணமாக இருந்த ஒரு வகை வைரஸ், இந்திய கிர் சிங்கங்களையும் தாக்கி உள்ளதா?

‘கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ்’ தாக்கியதில் இதுவரை, கிர் காட்டுப்பகுதியில் வாழும் நான்கு சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக குஜராத் மாநில அரசு உறுதிபடுத்தியுள்ளது. மேலும், மூன்று சிங்கங்களை இந்த வைரஸ் தாக்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் அவை தனியே மீட்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கிர் காட்டில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 23 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. உலகிலேயே கடைசியாக இருக்கும் ஆசிய சிங்கங்கள் இவைதான். இதுதொடர்பாக வன அதிகாரிகள் பல்வேறு விளக்கங்களை அளித்தனர்.

இறந்த 11 சிங்கங்களை சோதனை செய்ததில், அதில் 4 மாதிரிகளில் கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என அம்மாநில வனத்துறை அமைச்சர் கன்பத் வசவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கிர் சிங்கங்கள்

இந்நிலையில் பிபிசி குஜராத்தியிடம் பேசிய வனப்பாதுகாவர் வசவடா, சிங்கங்களுக்கான தடுப்பூசிகளை உடனடியாக இறக்குமதி செய்யப்போவதாக தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எந்த வைரஸாக இருந்தாலும் அதற்குத் தேவையான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை அமெரிக்காவில் இருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.

குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் டல்கனியா சரகத்தில்தான் இந்த சிங்கங்களின் உயிரிழப்புகள் நடந்துள்ளன.

இந்தப் பகுதியில் இருந்து 23 சிங்கங்களையும், இதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 37 சிங்கங்களையும் வனத்துறை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். இந்த சிங்கங்களின் உடல்நிலை நலமாக இருப்பதாகவும், இவை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இலங்கை
இலங்கை

கிர் மற்றும் கிரேட்டர் கிர் பகுதிகளில் உள்ள சிங்கங்களை சோதனை செய்ய குறைந்தது 140 குழுக்களை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.

எச்சரிக்கை மணி

கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் மிக அபாயகரமானது. மேலும் இது வேகமாக பரவ கூடியது என்கிறார் வனவிலங்கு ஆர்வலர் மற்றும் உயிரியலாளரான ராஜன் ஜோஷி.

கிர் சிங்கங்கள்

1994ஆம் ஆண்டு, தான்சானியாவின் செரெங்கடி சரகத்தில் வெறும் 10 – 15 நாட்களில் சுமார் 1000 சிங்கங்களை இந்த வைரஸ் கொன்றுள்ளது. தற்போது கிர் சிங்கங்களை தாக்கியுள்ளது கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் என்றால், இது அரசாங்கத்துக்கு ஒரு எச்சரிக்கை மணி என்றும் ஜோஷி கூறுகிறார்.

இந்த வைரஸ் அபாயகரமானது என்பதால் ஆசிய சிங்கங்களை, இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு மாற்ற வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

வனவிலங்கு உயிரியலாளர் டாக்டர் பரத் ஜெத்வா பிபிசியிடம் கூறுகையில், “சிங்கங்களை சுற்றியுள்ள பகுதியில் உள்ள நாய்களுக்கு உடனடியாக தடுப்பூசி போடுவதை வனத்துறை முன்னிலைபடுத்த வேண்டும்” என்றார்.

வைரஸ் தாக்கிய சிங்கங்களை தனியே வைத்தது, சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிங்கங்களை அப்புறப்படுத்தியது போன்ற வனத்துறை நடவடிக்கைகளையும் ஜெத்வா பாராட்டுகிறார்.

கெனைன் வைரஸ் என்றால் என்ன? சிங்கங்களை எப்படி இது பாதிக்கிறது?

“மிகவும் அபாயகரமான கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ், பூனைகள் மற்றும் நாய்களில் வழக்கமாக இருக்கும். காட்டுப்பகுதிக்கு சற்று வெளியே அவ்வப்போது வரும் சிங்கங்களுக்கு, பூனைகள் மற்றும் நாய்களுடன் தொடர்பு ஏற்படும் போது, அவற்றிடம் இருந்து மிக எளிதாக இந்த வைரஸ் பரவும். முக்கியமாக அவை பகிர்ந்து கொள்ளும் உணவில் இருந்து இது பரவுகிறது. இது ஆபத்தான வைரஸ் என்றாலும், இதற்கு தடுப்பூசி உண்டு. சிங்கங்கள் இருக்கும் பகுதியில் உள்ள நாய்களுக்கு தடுப்பூசி போடும் பட்சத்தில், சிங்கங்களை வைரஸ் தாக்கும் அபாயம் குறையும்” என்கிறார் டாக்டர் பரத் ஜெத்வா.

இலங்கை
இலங்கை

காட்டுப்பகுதிக்கு வெளியே சிங்கங்கள் தங்கள் இரையை கொன்று தின்ற பின்பு, அவற்றை நாய் மற்றும் பூனைகள் உண்ணும். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு, தான் அடித்துக் கொன்ற இரையை மீண்டும் சிங்கங்கள் சாப்பிட வரும்போது, இந்த கெனைன் வைரஸ் எளிதாக பரவும் என்று ராஜன் ஜோஷி தெரிவித்தார்.

அரசு என்ன கூறகிறது?

தேசிய வைராலஜி நிறுவனம், கால்நடை கல்லூரி (ஜூனகத்) மற்றும் தடய அறிவியல் ஆய்வகம் ஆகியவற்றிற்கு இந்த வைரஸ் தொடர்பான மாதிரிகளை அரசு அனுப்பியுள்ளது.

உண்ணியால் தொற்று பரவியதையடுத்து, ஆறு சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக ஜூனகத் கால்நடைக் கல்லூரி ஆய்வு தெரிவிக்கிறது.

கிர் சிங்கங்கள்

“இந்த தொற்றால், சிங்கங்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. மேலும் இந்த தொற்று சரசரியா பகுதியில் உள்ள சிங்கங்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த சிங்கங்களின் எண்ணிக்கையில் 1 சதவீத சிங்கங்கள் மட்டுமே அங்கு வசிக்கின்றன” என வனப்பாதுகாவலர் வசவதா தெரிவத்தார்.

அரசாங்கம் அமைத்துள்ள 140 குழுக்களில் 550 பேர் இடம் பெற்றுள்ளனர். உத்தர பிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆய்வக கழகத்தில் இருந்து 5 நிபுணர்கள், டெல்லி உயிரியல் பூங்காவில் இருந்து 5 நிபுணர்கள், இடாவா லயன் சஃபாரியில் இருந்து இருவர் மற்றும் குஜராத் மாநிலத்தின் இருந்தும் பல நிபுணர்கள் இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ளனர்.

கிர் மற்றம் அதனை சுற்றியுள்ள 3,000 சதுர கி.மீ பகுதிகிளை இந்தக் குழுக்கள் சோதனை செய்தன. இதில் வெறும் 9 சிங்கங்கள் மட்டுமே நோய்வாய்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 4 சிங்கங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மீதமுள்ள 5 சிங்கங்கள் மீட்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

கெனைன் டிஸ்டெம்பர் வைரஸிற்கான தடுப்பூசி அக்டோபர் 5ஆம் தேதி குஜராத் வந்தடைய உள்ளது. “தடுப்பூசி வந்தடைந்ததும் நிபுணர்களின் கண்காணிப்பில் சிங்கங்களுக்கு அவை அளிக்கப்படும்” என்றும் வசவடா தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: