டெல்லி: சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்த அறிக்கை தயாரிப்பது தொடர்பான விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு, கீழடியில் மத்திய அகழ்வாராய்ச்சிப் பணிகள் துவங்கின. இந்த பணியை துவக்கியது, அப்போது, பெங்களூரில் தொல்லியல் துறை சூப்பிரண்டாக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன்.
2016ம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் இவரது தலைமையில், கீழடியில், அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தமிழர் நாகரீகம்
தமிழ் பிராமி எழுத்துக்கள், தமிழர்கள் பயன்படுத்திய அந்த காலப் பொருட்கள், உளிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் என்று ஆய்வில் தெரிய வந்தது. இந்த அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பு என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது.
சட்டம் சொல்கிறது
தொல்லியல் துறை சட்டத்தின்படி, ஒரு இடத்தில் அகழ்வாராய்ச்சியில் எந்த அதிகாரி ஈடுபடுகிறாரோ அவர்தான் பணிகள் குறித்த இறுதியறிக்கையை தயாரிக்க வேண்டும். இறுதி அறிக்கை தயாரிக்கும் போது, கண்டறியப்பட்ட பொருட்கள் எவ்வளவு பழமையானது? அது எந்த நாகரிகத்தை சேர்ந்தது போன்றவற்றையெல்லாம் ஆராய்ச்சியில் ஈடுபட்ட தொல்லியல் துறை அதிகாரி தான் அறிக்கையாக அளிக்க வேண்டும்.
அசாம் பணியிடமாற்றம்
ஆனால் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி அகழாய்வு தலைவராக இருந்தபோதே திடீரென அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இறுதி அறிக்கை தயாரிக்கும் பொறுப்பை, பெங்களூரிலுள்ள வேறு, தொல்பொருள் துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது. சம்பந்தமே இல்லாத, வேறு அதிகாரிகள் மூலம் அறிக்கை தயாரிப்பதன் நோக்கம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
இதுகுறித்து, எழுத்தாளர் வெங்கடேசன் கூறுகையில், தற்போதைய மத்திய அரசு வேதகால நாகரீகம்தான் இந்திய நாகரீகத்தின் பூர்வீகம் என்று நம்பிக்கை கொண்டு உள்ளது. ஆனால், கீழடியில் தமிழர் நாகரீகம்தான் பழமையானது என்ற ஆதாரங்கள் வந்ததும், அந்த அகழாய்வை விரும்பவில்லை. அமர்நாத் ராமகிருஷ்ணனை பணியிடமாற்றம் செய்துவிட்டு மூன்றாவது ஆண்டில் அகழாய்வை நிறுத்திவிட்டனர். இது இதுவரை நடந்த வேலை. இப்போது, அமர்நாத் ராமகிருஷ்ணனை அறிக்கை தயாரிக்க விடாமல் உத்தரவிட்டிருப்பது என்பது கீழடி கண்டுபிடிப்பை மூடி மறைக்கிற சதி. இது இந்திய நாகரீகத்திற்கும், தமிழ் நாகரீகத்திற்கும் இழைக்கப்படும் துரோகம் என்று நினைக்கிறேன்.
ஆய்வு பாதியில் நிற்கிறது
இதுவரை இந்திய தொல்லியல் துறை வரலாற்றில் யார் அகழாய்வு செய்தார்களோ அவர்கள்தான் அறிக்கை தயார் செய்துள்ளார்கள். ஆதிச்சநல்லூர் அகழாய்வு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை அகழாய்வு செய்த சத்யமூர்த்தி ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அவர்தான் இன்றும் அகழாய்வு அறிக்கையை தயாரித்து வருகிறார். ஆனால், கீழடியில் யாரோ ஒருவர் அறிக்கை தயாரிப்பது சரியல்ல. தங்கள் கொள்கைக்கு எதிராக முடிவுகள் வந்தால் அகழாய்வுகளுக்கு நிதி ஒதுக்குவதை மத்திய அரசு நிறுத்திவிடுகிறது. ஜல்லிக்கட்டு தொடங்கியே தமிழர்கள் வரலாறு, கலாச்சாரத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவின் அறிவு சொத்து சட்டத்திற்கு எதிராக கீழடி விஷயத்தில் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. கீழடியெல்லாம் 20 ஆண்டுகள் அகழாய்வு நடத்தப்பட வேண்டிய இடம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.