அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவுள்ள இந்தியா!

சமீபத்தில் ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து விலகி இருந்த டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்ததுடன் உலக நாடுகள் ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த எச்சரிக்கை அடுத்த மாதம் அமுலுக்கு வரவுள்ள நிலையில் இதனை செவிமடுக்காது இந்தியா ஈரானுடன் எதிர் வரும் மாதமும் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை மேற்கொள்ளவுள்ளது.

இந்தியாவுக்கு அதிகமான கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் ஈரான் உள்ளது. இந்நிலையில் ஈரான் மீதான அமெரிக்காவின் இறக்குமதித் தடை உத்தரவு மேலும் சர்வதேச வங்கிச் சேவைகளின் முடக்கம் போன்ற காரணிகளால் இந்தியாவுக்கும் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதாவது இதுவரை ஈரானுடன் யூரோக்களில் எண்ணெய்க் கொள்வனவு செய்து வந்த இந்தியா இனிமேல் நேரடியாக ரூபாயில் இந்த வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஈரானும் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் ஈரானிடம் இருந்து 1.25 மில்லியன் டன் பெறுமதியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் மங்களரூ ரிபைனரி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடட் ஆகியவை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

-4tamilmedia.com

TAGS: