புதுடில்லி: உலகம் முழுவதும் கடந்த 7 ஆண்டுகளில் செல்பி மோகத்தால் பல்வேறு சம்பவங்களில் சிக்கி 259 பேர் பலியாகி இருப்பதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
அனைவரது வாழ்விலும் ஸ்மார்ட் போன் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதிலும் குரூப் போட்டோ எடுப்பது, செல்பி எடுப்பது என்பது முக்கிய ஒரு வைபவமாகவே மாறி போனது. செல்பி எடுக்கும் நேரத்தில் ஆபத்தை உணர தவறி விடுகின்றனர். ஓடும் ரயில், மலை, கடல், அருவி, அணை, உயரமான மாடி என முடிந்த அளவுக்கு செல்பி எடுப்பதே மகிழ்வாகி போனது. இதனால் பல உயிர்ப்பலியும் நடப்பதும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில்தான் அதிகம்
டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில் செல்பி மோகத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை கடந்த 2011 முதல் 2017 வரை 259 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் அதிக பலி சம்பவம் நடப்பது இந்தியாவில்(159 பேர்) தான் என்றும், அடுத்தப்படியாக ரஷ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான் என ஆய்வில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இறப்பவர்கள் 30 வயதுக்குட்பட்டவர்களாகவே உள்ளனர். செல்பி மோகம் பெண்களையே அதிகம் பாதித்துள்ளதாகவும், இருப்பினும் பலியாவது ஆண்களே அதிகம் என்கிறது இந்த ஆய்வறிக்கை.
இதுபோன்ற உயிர்ப்பலியை குறைக்க ஆபத்தான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
-dinamalar.com