மண்ணள்ளி மூடப்படுகிறது கீழடி…நினைத்ததை முடித்தார்களா? நிர்மலாவும், முகேஷும்..??

மத்திய தொல்லியல் துறை சார்பில் மதுரை அருகில் கீழடியில் தமிழக அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2014 முதல் இரண்டு கட்ட அகழாய்வு நடைபெற்றது. இந்நிலையில் 2017 ஏப்ரலில் அவரை திடீரென அஸ்ஸாமுக்கு  இடம்மாற்றப்பட்டார். இதனை எதிர்த்து அவர் கோர்ட்டுக்கு போன நிலையில் அவருக்கு பதில் ஸ்ரீராம் புதிய இயக்குனராக அகழாய்வு பணியை தொடங்கினார்.

அமர்நாத் நக்கீரனுக்கு அப்போது அளித்த பேட்டியில், இதுவரை அகழாய்வு பணியில் உள்ள அதிகாரியை பணி நிறைவுபெறாமல் மாற்றுவது என்பது நடைமுறையில் இல்லை. வேண்டுமென்றே என்னை மாற்றியிருக்கிறார்கள். என் தலைமையில் இதுவரை கண்டுபிடித்த ஆவணங்களின் பட்டியலை அனுப்பியிருந்தேன் ”அப்போது மத்திய அரசிடம் இருந்து ஏன் சாமி சிலைகள் ஏதும் கண்டெடுக்கபடவில்லை என்ற கேட்டனர். அதற்கு நாம் சரியான பதிலை கொடுத்திருந்தோம் ”திராவிட நாகரீகம் 2,500 வருடங்களுக்கு முன்னானது  இப்போது உள்ள கடவுள் வணக்கம் அப்போது இல்லை. தமிழர்களிடம்  முன்னோர்கள் வழிபாடு காணப்பட்டதால் தற்போதைய சாமி சிலைகள் இல்லை என்று பதில் அளித்திருந்தேன்” அதன் பின்பு இரண்டு நாட்களில் எனக்கு இடமாறுதல் தபால் வந்தது. அதற்கான காரணத்தை கேட்டு விளக்கம் கேட்டுள்ளேன் என்றும் கூறியிருந்தார். அதை பேட்டியாக வெளியிட்டிருந்தோம்.

keeladi

 இந்நிலையில் 2017 ஏப்ரல் 28-ல் அமர்நாத்தின் இடமாறுதலை கண்டித்து தமிழகத்தின் அனைத்து கட்சியினரும் குரல் கொடுக்க மத்திய பாஜக மத்திய பண்பாட்டு துறை அமைச்சர் முகேஷ் சர்மாவும், இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் கீளடிக்கு வருகை தந்தனர். இதில் உள்நோக்கம் இருக்கிறது இந்த அகழாய்வை மண்ணை போட்டு மூடப்பார்க்கிறார்கள் என்று சொல்லி    இதை எதிர்த்து திருமுருகன் காந்தி தலைமையில் கருப்பு கொடி ஆர்பாட்டம் நடத்தி கைதாகினர்.

keeladi

 அது தற்போது நடந்தேறிவிட்டது. இந்த நான்காம் கட்ட அகழாய்வு ஏப்.18ல் தொடங்கியது அகழாய்வில் யானை தந்தம், தங்க காதணி, அச்சுக்கள், பொம்மைகள், பானை ஓடுகள், உறைகிணறு உள்ளிட்ட 7 ஆயிரத்திற்கும் மேல் பொருட்கள் கண்டறிபட்டன. தமிழக தொல்லியல்துறை இயக்குனர் சிவா  தலைமையில் ஹெலிகேம் கேமரா மூலம் அனைத்தையும் படம் பிடித்தனர்.  அப்போது அவர் நம்மிடம் ”இந்த குழிகள் அனைத்தும் மண்ணைபோட்டு மூடப்படும், மொத்தமாக கீழடி அகழாய்வு இத்துடன் முடிக்கபடுகிறது இதற்கான அறிக்கையை தயாரிக்கும் பணியை அமர்நாத்திற்கு பதில்  ஸ்ரீ லெட்சுமி என்ற ஆந்திராவைச் சேர்ந்த அதிகாரியிடம் ஒப்படைக்கபடுகிறது என்றார்.

keeladi

மேற்கொண்டு பேச எனக்கு வாய்பில்லை எதுவும் கேட்க வேண்டுமென்றால் எனக்கு மேல் உள்ள அதிகாரிகளிடம் கேட்டுகொள்ளுங்கள் என்று நகர்ந்தார்.

இது தமிழகத்தில் மீண்டும் வரலாற்று ஆய்வாளர்களுக்கிடையே சர்சையை ஏற்படுத்தி உள்ளது.  இதன் ஆரம்பம் முதல் கீழடி அகழாய்விற்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருந்த பேராசிரியர் பாலசுப்பிரமணியம் நம்மிடம் ”சார் வயிற்றெரிச்சாலாக இருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீழடியை அவர்கள் நினைத்த மாதிரி மூடிவிட்டார்கள்.  ஆனால் இரண்டு கட்டமாக ஆய்வு செய்த அதிகாரி அமர்நாத்தை அறிக்கை தாக்கல் செய்யவிடாமல் இதற்கு சம்மந்தமில்லாத லட்சுமி என்ற அதிகாரியை அறிக்கை தாக்கல் செய்ய சொல்வது என்ன நியாயம்? இதில் எதையோ மறைக்க பார்க்கிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்றார்.

keeladi

இதுகுறித்து இதற்காக போராடிய திருமுருகன் காந்தியிடம் கேட்டோம்…

keeladi

சென்ற வருடம் ஏப்2-8 ம் தேதியே பண்பாட்டுதுறை அமைச்சர் முகேஷ் சர்மாவும், இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும் வந்தபோதே நாங்கள் சொன்னோம்

”இந்தியாவில் திராவிட இனம்தான் ஆரிய வருகைக்கு முன்பே இருந்தது என்ற வரலாறு உண்மை தெரிந்துவிடும் என்றுதான் அமர்நாத்தை மாற்றினார்கள். தற்போது இந்த அகழாய்வு பணியை மூடிவிடவேண்டும் என்று தாங்கள் நினைத்ததை செய்துவிட்டார்கள். இதன் முழு அறிக்கையை முறைபடி சட்டபடி அமர்நாத்தான் தாக்கல் செய்யவேண்டும். அதையும் மாற்றியிருக்கிறார்கள் இதை இன்று அண்ணன் வைகோவும் எதிர்த்து பேசியிருக்கிறார். இதே கருத்தை நாங்கள் அன்றே சொன்னோம் இப்படியெல்லாம் நடக்கும் என்று அது நடந்து விட்டது..என்றார்.

keeladi

இதற்கிடையே அஸ்ஸாமில் இருக்கும் இயக்குனர் அமர்நாத்திடமே பேசினோம் ”இதற்கான ஆய்வு அறிக்கை தாயாரிப்பு பணியை அகழாய்வு செய்த அதிகாரிதான் செய்வது வழக்கம் ஆனால் என்னை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் அந்த பணியை ஸ்ரீ லட்சுமி ஆந்திராவை சேர்ந்த அதிகாரியிடம் ஒப்படைக்கபட்டதாக தகவல் அனுப்பியுள்ளனர். மேற்கொண்டு சொல்ல ஒன்றுமில்லை என்று தன் ஆதங்கத்தை சொன்னார்.

மொத்ததில் தமிழர்களின் வரலாறு வெளியே வந்துவிடகூடாது என்பதில் மத்திய மோடி அரசு முனைப்பாக இருப்பது கண்கூடாக தெரிகிறது.

-nakkheeran.in

TAGS: