சென்னை : கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இயல்பை விட 132 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.
தமிழக பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியதாவது:
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக ஒடிசா நோக்கி நகர உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
கடந்த வாரத்தில் தமிழகத்தின் 29 மாவட்டங்களில் வழக்கத்தை விட கூடுதலாக 132 சதவீத மழை பெய்துள்ளது.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் புயல் காற்றுடன் மழை பெய்யும். இதற்கு எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்திய வானிலை ஆய்வு மையம் கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு அரபி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை “லுபான்” என்ற புயலாக மாறி ஓமனை நோக்கி நகரும் என தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 15 படகுகளில் சென்ற 514 மீனவர்களை இதுவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இருக்கும் இடங்கள் கணிக்கப்பட்டுள்ளன . கடலுக்கு சென்று திரும்பாத 132 படகுகளில் 86 படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தெரிவிக்க வேண்டிய படகுகளில் சுமார் 509 மீனவர்கள் உள்ளனர்.
நீர் நிலைகளில் சிறுவர்கள் குளிப்பதை அனுமதிக்கக் கூடாது. ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
-dinamalar.com