ஸ்டெர்லைட் கலவரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது 13 பிரிவுகளில் வழக்கு

சென்னை, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 99 போலீசாரும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் காயமடைந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டது.

நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடியில் முகாமிட்டு துப்பாக்கி சூடு நடந்த பகுதிக்கே நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளும் அங்கேயே முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். தூத்துக்குடி சிறப்பு துணை தாசில்தார் பி.சேகர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி அன்று கோர்ட்டு ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில், சென்னை சி.பி.ஐ. சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி நேற்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தார்.

சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில், இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கிவிட்டனர். கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்குதல், வீடு புகுந்து தாக்குதல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் மற்றும் சந்தேக மரணங்கள் போன்ற 13 சட்டப் பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

20 அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நகலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி, மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற அமைப்புகளின் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன. 20 அமைப்புகளை சேர்ந்தவர்களும் கூட்டமாக திரண்டு வந்தது, பின்னர் மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது எப்படி என்பது குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ததில் தகவல்கள் உள்ளது.

சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கை 7 பக்கங்களை கொண்டதாக உள்ளது. இந்த முதல் தகவல் அறிக்கை கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதலில் விசாரணை நடத்திய தூத்துக்குடி சிப்காட் போலீசார், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிலர் குண்டர் சட்டத்திலும் சிறையில் தள்ளப்பட்டனர்.

கைதானவர்களை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், சி.பி.ஐ. போலீசார் புதிதாக இந்த வழக்கை பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். எதிர்க்கட்சிகள் தரப்பில், அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தவறு என்று கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர்.

ஆனால், போலீஸ் தரப்பில் கலவரக்காரர்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை தாக்க முற்பட்டதால் துப்பாக்கி சூடு நடத்த வேண்டியதாகிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கி சூட்டின்போது போலீசார் எஸ்.எல்.ஆர். எனப்படும் நவீன ரக துப்பாக்கிகளை பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. சி.பி.ஐ. விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என்றும் புதிதாக கைது நடவடிக்கைகளும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-dailythanthi.com

TAGS: