சென்னை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை ஏற்று கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் பெண் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யும் பணிகளில் இறங்கி உள்ளன.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவின் பல பகுதிகளிலும் ஐயப்ப பக்தர்களும், பெண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு நாள்தோறும் பேரணிகள் நடத்தி வருகின்றனர். தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இன்றும் திருவனந்தபுரத்தில் ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலையை காப்போம் என்ற முழக்கத்துடன் கண்டன பேரணி நடத்தினர்.
இந்நிலையில் கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள், பேரணிகள், சாலை மறியல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இன்று ஊட்டி, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது. சபரிமலையை காப்போம் என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி, ஐயப்ப பஜனை பாடல்களை பாடிய படி அவர்கள் போராட்டம் நடத்தினர்.
-dinamalar.com