ஜோதி சமைத்தால் சாப்பிட மாட்டோம்.. தலித் சமைத்த சத்துணவுக்கு பெற்றோர், மாணவர்கள் எதிர்ப்பு

காடையாம்பட்டி: சேலம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்துக்காக சத்துணவு ஊழியரை சமைக்க விடாமல் தடுத்துநிறுத்திய சம்பவம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

சமையலர் ஜோதி

காடையாம்பட்டி அருகே கணவாய்ப்புதூர் ஊராட்சி கே. மேரூர் அரசுப்பள்ளியில் சமையல் உதவியாளர் ஜோதி. இவருக்கு வயது 46. கடந்த 4 நாட்களுக்கு முன்பு, சமையலராக பதவி உயர்வு பெற்று, அதே ஊராட்சியில் உள்ள குப்பன் கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நியமிக்கப்பட்டார் ஜோதி .

டிசி கொடுங்கள்

இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 50 மாணவ, மாணவிகள் படித்துவருகிறார்கள். ஆனால் ஜோதி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அவர் சமைத்தால் நாங்கள் சாப்பிட மாட்டோம் என்று மாணவர்களும், ஜோதி சமைக்கும்வரை எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்களும் தலைமை ஆசிரியரிடம் கறாராக சொல்லிவிட்டனர். ஒன்று, அந்த சமையலரை மாற்றுங்கள், இல்லையென்றால் எங்கள் பிள்ளைகளுக்கு டிசி கொடுத்துவிடுங்கள் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டனர்.

விரைந்து வந்த விசிக

இதனால் தலைமை ஆசிரியர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இந்த புகாரை போக, அந்த அலுவலரும் பெற்றோர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் மேற்கொண்டார். ஆனால் சுமூகமுடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில், தாழ்த்தப்பட்ட பெண் சமைப்பதால் பெற்றோர்கள் செய்யும் கெடுபிடி விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் காதுக்கு எட்டியது.

சாலைமறியல்

இதையடுத்து நேற்று தீவட்டிப்பட்டி – பொம்மிடி சாலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீசாரிடமும், தாழ்த்தப்பட்ட பெண்ணை பள்ளியில் சமைக்கக்கூடாது எனக்கூறிய, பெற்றோர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீசார் சொன்னதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

சமூக நீதி தேவை

ஏற்கனவே திருப்பூர் அருகே சமையலர் பாப்பம்மாள் விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் தற்போது ஜோதி விவகாரம் துவங்கியுள்ளது. அறிவியல், கல்வி வளர்ச்சிகளில் வளர்ந்துவிட்டோம் என்று நாம் பீற்றிக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இதுபோன்ற தீண்டாமை சம்பவங்களும் இன்னொரு பக்கம் இன்னமும் அரங்கேறிக்கொண்டுதான் இருகின்றன என்பதை மறுக்க முடியாது. தமிழக அரசு இதில் தலையிட்டு சமூக நீதியை நிலைநாட்டிட வேண்டியது இன்றைய கட்டாய தேவை!!

tamil.oneindia.com

TAGS: