ஈரோடு: “ரொம்ப வயிறு வலிக்குதுமா… தாங்கவே முடியல” என்று மனைவியிடம் கண்ணீர் விட்டு அழுதார் 68 வயது குப்பன். அதுதான் அவர் கடைசி பேச்சும்!!
மொடக்குறிச்சி தாலுகா, தூரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்தான் குப்பன். விவசாயி. ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். 68 வயது ஆனாலும் உழைத்தால்தான் அன்னைக்கு சாப்பாடு. தள்ளாமையிலும் ஒரு நிலத்தில் கூலிக்கு வேலை பார்த்தார். ஆனால் அந்த முதலாளி முதலைகளோ 20 நாள் ஆகியும் கூலி பணத்தை தராமல் இழுத்து வந்துள்ளனர். அதனால் கடந்த 10-ம் தேதி முதலாளிகிட்ட பணம் வாங்க அவர் வீட்டுக்கு சென்றார் குப்பன்.
கீழே தள்ளி உதைத்தார்
குப்பனை பார்த்ததும் அந்த நில உரிமையாளருக்கு ஆத்திரம் வந்துவிட்டது. “எவ்ளோ தைரியம் இருந்தா நீ எல்லாம் என் வீட்டு வாசப்படி ஏறி வருவ? நீ கேட்டதும் நான் பணம் தரணுமா?” என்றார். இதனால் குப்பன், “அப்படி இல்லீங்க. நான் செஞ்ச வேலைக்கு தாங்க கூலி கேக்கறேன்” என்றார். இந்த ஒரு வார்த்தையை பேசியதும், யாரை பார்த்துடா எதிர்த்துபேசறே என்று கோபமடைந்த அந்த முதலாளி, குப்பனை கீழே தள்ளி சரமாரியாக அடித்திருக்கிறார்.
சுருண்டு விழுந்தார்
அப்போதும் அவர் ஆத்திரம் தீராமல் குப்பன் வயிற்றில் ஏறி மிதித்து மிதித்து தாக்கியிருக்கிறார். இதனால் சுருண்டு விழுந்து கிடந்த குப்பனால் எழுந்திருக்க கூட முடியவில்லை. நீண்ட நேரத்துக்கு ஒருவர் இப்படி கீழேயே விழுந்து கிடந்ததை பார்த்ததும், வயலில் வேலை பார்த்தவர்கள் ஓடிவந்து குப்பனை மீட்டு வீட்டுக்கு கொண்டு போனார்கள்.
வீங்கிய வயிறு
அப்போது தன் மனைவியிடம் குப்பன், “ரொம்ப வயிறு வலிக்குதுமா.. தாங்கவே முடியல” என்று கண்ணீர் விட்டு அழுதார். அப்போதுதான் குப்பனின் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக பெரிசாக ஆரம்பித்தது. வயிறு வீங்கி கொண்டே போவதை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு போனார்கள். அங்கே ஸ்கேன் எடுத்து பார்த்தால், வயிற்றில் பலமான காயங்கள் ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. ஆனால் குப்பன் இறந்துவிட்டார்.
உடலை வாங்க மறுப்பு
இந்த வயதிலும் உழைத்து சாப்பாடு போட்ட குப்பனை இப்படி அநியாயமாக அடித்து கொன்றுவிட்டார்களே என்று குடும்பமே கதறியது. குப்பனின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து, மொடக்குறிச்சி எஸ்.பி. அலுவலகம் முன்பு குவிந்து விட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்தார். அடித்து கொலை செய்துள்ளதால், உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பமே அவரிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு போலீசாரோ, முதலில் பிணத்தை வாங்குங்கள், நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர்.
கண்ணீர் சிந்தினர்
ஆனால் மரண துக்கத்தில் இருந்த குடும்பத்தினருக்கு போலீசாரும் தங்கள் பங்குக்கு இன்னலையே அள்ளி போட்டனர். இந்த கொலையை சந்தேக மரணம் என்று பதிவு செய்துள்ளனர். இதில் இன்னமும் நெஞ்சில் அடித்து அழுது கொண்டிருப்பது குப்பனின் மனைவிதான். காரணம், அவர் மனநிலை சரியில்லாதவராம். இப்படிப்பட்டவரையே குப்பனின் மரணம் தாக்கியுள்ளதே என்று அவரை பார்த்து மற்றவர்களும் கண்ணீர் சிந்தினார்கள்.