இயற்கை விவசாயம்: சிக்கிமிற்கு ஐ.நா., விருது

புதுடில்லி: இந்தியாவில், இயற்கை விவசாயத்திற்கு முற்றிலும் மாறிய சிக்கிம் மாநிலத்திற்கு ஐ. நா., சபை விருது அளித்துள்ளது.
வேதி பொருள் மற்றும் உரத்தில் இருந்து விடுபட்டு முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாறிய மாநிலம் என சிக்கிம் கடந்த 2016ல் அறிவிக்கப்பட்டது. சிக்கிம், விவசாய கொள்கைகள் மூலம் 66 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இதனால், சுற்றுலாவும் அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டுகளில், பாலைவனமாக்கல், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக வன்முறை, அணு ஆயுதங்கள், கடல் மாசுபாடு ஆகியவற்றிற்கு எதிரான கொள்கைகளுக்கு ஐ.நா., வழங்கி வந்த விருது, இந்த ஆண்டு, இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாயம், மரம் நடுதல், மண்ணை பாதுகாக்கும் வகையில் பயிர்கள், வேதியியல் உரம் பயன்படுத்துவதை தவிர்ப்பது ஆகியவற்றிற்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த வகையில், இயற்கை வேளாண்மைக்கு முற்றிலும் மாறிய சிக்கிமிற்கு விருது வழங்கப்பட்டு உள்ளது. கடந்த 2014 முதல் 2017 ல் சிக்கிமில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து உள்ளது. சுற்றுச்சூழல் இயலை பாதுகாக்கப்பதில் சிக்கிம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளதாக ஐ.நா., அதிகாரி கூறியுள்ளார்.

பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுக்கான பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கியதற்காகவும், இயற்கை உரம் குறித்து மக்களிடம் அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும் டென் மார்க் நாட்டிற்கும் ஐ.நா., விருது அளிக்கப்பட்டு உள்ளது.

-dinamalar.com

TAGS: