திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலையில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை விழா அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக ஆலோசனை கூட்டம் ஒன்றை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்துகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் இந்த கூட்டத்துக்காக தந்திரிகள், பந்தளம் அரச குடும்பத்தினர், பக்தர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், ‘சபரிமலை தொடர்பான எந்த விவகாரத்திலும் தேவசம்போர்டு பாரபட்சம் காட்டுவதில்லை. கோவில் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்கு இந்த கூட்டம் நடத்துகிறோம். இதில் அவர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை கூறட்டும். அதைத்தொடர்ந்து அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் முடிவு எடுக்கலாம்’ என்று தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து ஒருங்கிணைந்த முடிவு பின்னர் எடுக்கப்படும் என பந்தளம் அரச குடும்பம் மற்றும் தாழமன் தந்திரிகள் கூறியுள்ளனர்.
-dailythanthi.com