திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் தீரவிமடைந்து வருகிறது. தமிழகம், கேரளா மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டம், கண்டன பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சபரிமலையில் மாதாந்திர பூஜைக்காக நடைதிறக்க இன்னும் 2 நாட்களே உள்ளது. அதற்குள் சபரிமலை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற இறுதிக்கட்ட முயற்சியில் கேரள அரசு இறங்கி உள்ளது. இதற்காக தந்திரி குடும்பத்தினர், பந்தள அரண்மனை பிரதிநிதிகள், ஐயப்பா சேவா சங்க தலைவர்கள் ஆகியோரை அக்.,16 அன்று நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி திருவிதாங்கூர் தேவசம் போர்டு அழைத்துள்ளது.
தீர்ப்பை எதிர்த்து பா.ஜ., கண்டன பேரணி அறிவித்துள்ள நிலையில் அதற்கு முன் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், வன்முறை மற்றும் இருதரப்பு மோதல்களை தவிர்க்கவும் கேரள அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக கேரள அரசு ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு அழைத்த போது தந்திரி குடும்பத்தினரும், பந்தள மன்னர் குடும்பத்தினரும் வர மறுத்து விட்டனர். பெண்களை கோயிலில் அனுமதிக்க ஏற்கனவே முடிவு செய்து விட்டு, வெறும் கண்துடைப்புக்காக கேரள அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
இதே போன்று இம்முறையும் நடக்க வேண்டாம் என்பதால் பிரச்னையை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில், பழங்கான பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை மாற்ற நாங்கள் நினைக்கவில்லை. சபரிமலை பாரம்பரிய நம்பிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கவே விரும்புகிறோம். அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். சபரிமலை விவகாரத்தை அரசியல் பிரச்னையாக்க தேவசம் போர்டு விரும்பவில்லை. எந்த நிபந்தனையும் இல்லாமல் தந்திரி குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இந்த ஆண்டு சீசனுக்கு வரும் பக்தர்கள் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பேச்சுவார்த்தை என்றார்.
தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், தரிசனத்திற்காக வரும் பெண்களை தடுக்க முடியாது. தேவசம் நிர்வாகிகள் பெண் போலீசார் மற்றும் தேவசம் பெண் ஊழியர்கள் சன்னிதானம் முன் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவர் என்றார்.
-dinamalar.com