சபரிமலை அடிவாரம்: வாகனங்களை சோதனையிட்டு பெண்களை இறக்கும் பாஜக ஆதரவு மகளிர்

பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைவதை தடுப்பதற்காக சபரிமலை அடிவாரத்தில் உள்ள நிலக்கல் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவு பெற்ற பெண் போராட்டக் குழுவினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், புதன்கிழமை ஐயப்பன் கோயில் நடை திறப்பதால், பெண்கள் யாரும் செல்வதைத் தடுக்கும் வகையில் இந்தப் பெண்கள் முகாம் அமைத்து அங்கு தங்கி போராட்டம் நடத்துகின்றனர். வாகனங்களை சோதிக்கின்றனர்.

ஐயப்பனை வாழ்த்தி மந்திரங்களை சொல்லிக்கொண்டிருக்கும் இவர்கள், 10 முதல் 50 வயது வரை இருக்கும் பெண்கள் இந்த கோயிலில் நுழையக்கூடாது என்று சொல்லி, திரும்பி செல்லக் கட்டாயப்படுத்துகின்றனர்.

நாள் முழுவதும் இந்த போராட்டத்தை தொடரும் வகையில், ஆண்களும் பெண்களுமாக 100 பேர் கொண்ட குழு ஒன்று நிலக்கல் கிராமத்தில் முகாமிட்டுள்ளது.

சபரிமலை

ஐயப்பன் பிரம்மச்சாரி என்றும் எனவே மாதவிடாய் வரும் வயதுடைய பெண்கள் ஐயப்பனை சென்று பார்க்கக்கூடாது என்றும் தெரிவிக்கும் இந்த பெண்கள் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு மீது மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.

ஆனால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “இந்த தீர்ப்பு மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்படாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

“இந்த கோயிலுக்கு வரும் எல்லா வாகனங்களையும் நாங்கள் சோதனை செய்வோம். 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் இருப்பதைக் கண்டால் அவர்களை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கமாட்டோம். பாரம்பரியம் அப்படியே பின்பற்றப்படுவதை நாங்கள் விரும்புகிறோம். பெண்கள் இந்த கோயிலுக்கு வர விரும்பினால், 50 வயது ஆகும் வரை காத்திருக்கட்டும்” என்று போராட்டக்காரர்களில் ஒருவரான லலிதாம்மா தெரிவித்தார்.

சபரிமலை

பக்தர்கள் நிரம்பிய அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும், தனியார் வாகனங்களையும் பெண் பேராட்டக்காரர்கள் நிறுத்தி சோதனையிட்டனர்.

இரண்டு இளம் பெண்கள், ஒரு ஆண் மற்றும் வயதான பெண் ஒருவர் ஆகியோரை ஏற்றிவந்த வாடகைக்கார் இந்த போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டது. அவர்கள் ஊரைவிட்டு திரும்பிப் போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.

சபரிமலை

காவல்துறையினர் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முயன்ற நேரத்தில் பீதிக்குள்ளான அவர்கள், சில நிமிடங்கள் காத்திருந்த பிறகு அங்கிருந்து திரும்ப சென்றுவிட்டனர்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பவர்களில் ஒருவர் இளம் பெண்ணான நிஷா மணி.

“நான் இங்கேயே பிறந்தேன். இங்குதான் வளர்ந்தேன். எனது குடும்பத்திலுள்ள ஆண்கள் சபரிமலை கோயிலுக்கு சென்றுள்ள நிலையில், நான் இதுவரை அங்கு சென்றதில்லை. இந்த காட்டின் மத்தியில்தான் வசிக்கிறேன். இந்த கோயிலை சென்றடைய பல வழிகள் உள்ளன. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகின்ற பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு இந்த கோயிலுக்கு நான் போகவில்லை. இளம் பெண்கள் இந்த கோயிலில் நுழைவதை தடுக்க இங்கு வருகின்ற எல்லா வாகனங்களையும் நிறுத்தி விடுவோம்” என்று அவர் கூறினார்.

இலங்கை
இலங்கை

“உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இளம் பெண்களை இந்த கோயிலில் நுழைய அனுமதித்தால், கூட்டாக தற்கொலை செய்துகொள்வோம்” என்றுகூட போராட்டக்காரர்களில் சிலர் கூறினார்.

அக்டோபர் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் சாமி தரிசனத்திற்காக அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை

விநாயகரை வழிபட பிராதான கோயிலில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பம்பா வரை பெண் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால், இந்திய உச்ச நீதிமன்ற ஆணைக்குப் பின்னர் பம்பா வரையில் பெண்கள் செல்வதைக்கூட இந்த போராட்டக்காரர்கள் தடுத்து வருகின்றனர். -BBC_Tamil

TAGS: