புதுடில்லி : கோஹினுார் வைரம், பிரிட்டன் ராணிக்கு எவ்வாறு சென்றது என்பது குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது.
இந்தியாவில் தோண்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும், மிகவும் அபூர்வமான, கோஹினுார் வைரம், பல்வேறு அரச பரம்பரைகளிடம் கைமாறியது. பின், பிரிட்டன் ராணி விக்டோரியாவின் மகுடத்தில் பதிக்கப்பட்டது. தற்போது, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இந்த வைரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கோஹினுார் வைரத்தை மீட்டு வரக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
கடந்த, 2016ல், இந்த வழக்கு விசாரணையின்போது, ‘கோஹினுார் வைரத்தை ஆங்கிலேயர்கள் திருடிச் செல்லவும் இல்லை; பறித்து செல்லவும் இல்லை. அது பஞ்சாபை ஆண்ட அரசர்களால் பரிசாக அளிக்கப்பட்டது’ என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், சமூக ஆர்வலர் ரோஹித் சபர்வால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு, தொல்லியல் துறை அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: கடந்த, 1849ல், ஆங்கிலேய அரசின் கவர்னர் ஜெனரலாக இருந்த, லார்ட் டல்ஹவுசியுடன், மஹாராஜா துலீப் சிங், ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதில், இரண்டாவது ஆங்கிலோ – சீக்கிய போரில் உதவி செய்வதற்காக, கோஹினுார் வைரத்தை ஒப்படைப்பதாகக் குறிப்பிடப்பட்டது.
அதாவது, ‘மஹாராஜா ரஞ்ஜித் சிங் வைத்திருந்த கோஹினுார் வைரத்தை, அவரது வாரிசுகள், பிரிட்டன் ராணியிடம் ஒப்படைக்க வேண்டும் என, அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, மஹாராஜா துலீப் சிங்குக்கு, 9 வயது. இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.
இதில் இருந்து, ‘கோஹினுார் வைரத்தை, மஹாராஜா துலீப் சிங் விருப்பப்பட்டு ஒப்படைக்கவில்லை. அதை ஒப்படைக்கும்படி, கட்டாயப்படுத்தி, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது’ என்பது தெளிவாகியுள்ளது. இது உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த பதிலுக்கு முரண்பாடாக உள்ளது.
-dinamalar.com