புதுடெல்லி, கார்ப்பரேசன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் மொத்தம் ரூ.40 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழில் அதிபர் வினய் மிட்டல். அந்த வங்கிகளின் கோரிக்கையை ஏற்று, அவர் மீது 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில், சி.பி.ஐ. 7 வழக்குகளை பதிவு செய்தது. டெல்லி மற்றும் காசியாபாத் கோர்ட்டுகளில் குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்தது.
இதையடுத்து, வினய் மிட்டல், நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் தலைமறைவானதாக கோர்ட்டு அறிவித்தது. அவருக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, அவர் இந்தோனேசியா நாட்டின் பாலியில் குடும்பத்துடன் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் அடிப்படையில், அவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தோனேசியா போலீசார் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு அதிபர் சமீபத்தில்தான் ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, இந்தியாவுக்கு வந்து சேர்ந்த வினய் மிட்டல் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-dailythanthi.com