சபரிமலை: கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்ணின் ‘கைகூடாத கனவு’

சபரிமலைக்கு பெண்கள் அனைவரும் செல்லலாம். வயது இனி ஒரு தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு 45 வயதான இந்த தெலுங்கு பெண்ணின் கனவை நினைவாக்கவில்லை.

தன் தாய் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பம்பைக்கு வந்தார் இந்தப் பெண். சபரிமலை கோயிலின் நுழைவாயிலுக்கு அவர் சென்ற போது, அவரை சில வீடியோ எடுத்தனர். சிலர் அவரிடம் அவரின் வயதை கேட்டனர்.

அவர் பொய் சொல்லவில்லை. சரியாக தன் வயதை குறிப்பிட்டார். அங்கிருந்தவர்கள் அவரை நோக்கி சத்தம்போட தொடங்கினர், கோஷம் எழுப்பினர்.

சபரிமலையில் பெண்கள்: "மாற்றம் ஒன்றே மாறாதது"

இந்த கோஷம் அவரின் குழந்தைகளை நிலைகுலைய செய்தது. ஒரு குழந்தை அழவே தொடங்கியது.

போலீஸ் அவர்களை பாதுகாப்பாக சுற்றி வளைத்தது. பம்பை போலீஸ் கட்டுபாட்டு அறை அருகே இந்த சம்பவம் நடந்தது. அவரை பாதுகாப்பாக அழைத்து வந்தது.

ஊடகத்திடம் பேச வேண்டாமென அந்தப் பெண் கேட்டுக்கொள்ளப்பட்டார்.

பாதுகாப்பு

சபரிமலை தேவசத்தால் 10 – 50 வயதுடைய பெண்கள் வரக்கூடாது என கட்டுபாடு விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம், என உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தப் பின் முதன்முதலாக சென்ற ஒரு பெண்ணுக்கு நேர்ந்தது இதுதான்.

போலீஸ் பாதுகாப்பு

பிபிசியிடம் பேசிய மூத்த காவல்துறை அதிகாரி, “பாதுகாப்புக்காகதான் நாங்கள் அவருடன் சென்றோம். அவர் மலை ஏற வேண்டுமென்று விரும்பி இருந்தால், உறுதியாக அனைத்து பாதுகாப்பையும் நாங்கள் அளித்திருப்போம்” என்கிறார்.

அந்தப் பெண் எந்த புகாரும் காவல்துறையிடம் அளிக்காமல், அந்தப் பகுதியைவிட்டு வெளியேறினார் என்று மற்றொரு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

சபரிமலைக்கு செல்வது தொடர்பாக பெண்களிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது.

காத்திருந்தேன்

பம்பை ஆற்றில் குளித்து முடித்து வந்த 72 வயதான சாந்தி, “ஐம்பது வயதிற்கு முன்பிலிருந்தே சபரிமலைக்கு வர வேண்டும் என்பது என் விருப்பமாக இருந்தது” என்கிறார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார். அண்மைய உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நேரடியான பதிலேதும் கூற மறுத்துவிட்டார்.

சபரிமலை

சென்னையிலிருந்து வந்த சரோஜாவுக்கு வேறு பார்வை உள்ளது. பம்பை வரை நடக்க முடியாத காரணத்தினால், அவரை நான்கு பேர் நாற்காலியில் சுமந்து வந்தனர்.

அவர், “ஐம்பது வயது கடந்தப் பின் தான் நான் இங்கே வந்தேன்.” என்கிறார்.

விடமாட்டோம்

இந்த கோயிலின் பாதுகாவலர்களான அரச குடும்பத்தை சேர்ந்த கேரள வெர்ம ராஜா, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்கிறார்.

தீர்ப்பு வரும்வரை யாரையும் கோயில் உள்ளே விடக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறோம் என்கிறார். -BBC_Tamil

TAGS: