ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் தூண் திருடப்பட்டதா? – சிலைகடத்தல் வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட கவிதா பேட்டி

இந்து அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையரான எம். கவிதா கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். தற்போது பிணையில் உள்ள அவர் சில நாட்களுக்கு முன்பாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் அறநிலையத் துறை குறித்து பரவலாக நிலவும் கருத்துகள் பற்றியும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் கவிதா. கைது நடவடிக்கைக்குப் பிறகு, அவர் அளிக்கும் முதல் பேட்டி இதுவாகும். பேட்டியிலிருந்து:

கே. நீங்கள் எதற்காக கைதுசெய்யப்பட்டீர்கள், உங்கள் மீது என்ன குற்றச்சாட்டு?

ப. நான் ஏன் கைதுசெய்யப்பட்டேன் என்பதை அந்தத் தருணத்தில் தெளிவாகச் சொல்லவில்லை. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர் கோயில் விவகாரம் தொடர்பாக கைதுசெய்வதாகச் சொன்னார்கள். சம்மன் கொடுங்கள். நான் விசாரணைக்கு ஆஜராகிறேன் என்று குறிப்பிட்டேன்.

ஆனால், நாங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம், அதனால் கைதுசெய்கிறோம் என்றார்கள். நான் பிணையில் வந்த பிறகுதான் ஒரு நாள் விசாரணை செய்தார்கள்.

அதை வைத்து என்னை எதற்காக கைதுசெய்தார்கள் என்பது குறித்த யூகங்கள்தான் எனக்கு இருக்கிறது. பிறகு நான் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோதுதான், ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்த பழைய சோமாஸ்கந்தர் சிலைக்குப் பதிலாக புதிய சிலையை வைத்துவிட்டு, பழைய சிலையை மாற்ற நான் முயற்சித்ததாக சொல்லியிருந்தார்கள்.

இது 2009ல் நடந்ததாக சொன்னார்கள். ஆனால், 2009ல் திருப்பணித் துறையைக் கண்காணிக்கும் இணை ஆணையர் பதவியில் நான் இல்லை. வேறு ஏதும் தெளிவாக எனக்குத் தெரியவில்லை.

கே. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை விவகாரம் என்பது என்ன, விரிவாகச் சொல்ல முடியுமா?

ப. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் மிகவும் பழமையான சோமாஸ்கந்தர் சிலை இருக்கிறது. சிவன் – பார்வதியுடன் முருகன் இருப்பதுதான் சோமாஸ்கந்தர். சிவனும் பார்வதியும் காலை மடித்து அமர்ந்திருப்பார்கள். நடுவில் முருகன் சிறியதாக இருப்பார். இந்தச் சிலை மிகவும் பழையதாக இருப்பதால், உற்சவங்களுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை; சிலை சேதப்பட்டுவிட்டால் ராஜாவுக்கு நல்லதல்ல என்றெல்லாம் சொல்லப்பட்டது.

இதனால், இந்தச் சிலையை கோவிலிலேயே வைத்துவிட்டு, உற்சவங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக புதிதாக ஒரு சிலையை, பக்தர் ஒருவர் செய்து கொடுத்தார். இந்தச் சிலையை 2011ல் பிரதிஷ்டை செய்ய முயன்றபோது, அப்போதிருந்த அறங்காவலர்கள் அதனை ஏற்கவில்லை.

2014-15ல் கோவிலின் செயல் அலுவலர் மீண்டும் ஒரு கடிதத்தை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பினார். அதில், பக்தர் செய்து கொடுத்த சிலை சரியில்லையென உள்ளூரில் உள்ள ஸ்தபதி கூறுகிறார். ஆகவே தலைமை ஸ்தபதியை வைத்து அந்தச் சிலை குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

சிலை
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் சிதிலமடைந்த இரட்டைத் திருமாளிகை.

இந்த விவகாரத்தை தலைமை ஸ்தபதிக்கு அனுப்பியபோது, தான் அந்த சிலையைச் சென்று பார்வையிட்டுவிட்டதாகவும் அது தொடர்பான அறிக்கையை அனுப்புவதாகவும் சொன்னார். அவரது அறிக்கையில், பக்தர் கொடுத்த சிலை ஆகம விதிகளின்படி சரியாக இல்லை என்று குறிப்பிட்டார். ஆகவே ஆகம விதிகளின் படி புதிய சிலை ஒன்றை செய்யலாம் என்றும் பக்தர் கொடுத்த சிலையை தங்கக் கவசம் அணிவித்து வைத்துக்கொள்ளலாம் என்றும் தனது அறிக்கையில் ஸ்தபதி தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கை கோவிலின் செயல் அலுவலருக்கு அனுப்பப்பட்டவுடன், அவர் புதிய சிலையை கோவிலின் சார்பாக செய்ய ஒரு விண்ணப்பத்தையும் விலைப்புள்ளி ஒன்றையும் அனுப்புகிறார். அந்த விண்ணப்பம் என்னிடம் வந்தபோது, தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் மூலம் இந்த சிலையை செய்யலாம் என குறிப்பு எழுதினேன்.

இதற்குப் பிறகு, அந்த விண்ணப்பம் ஆணையருக்குச் சென்றபோது உலோகங்களின் விகிதாச்சாரம் என்ன என்பதை அறிந்துவிட்டு பிறகு முடிவெடுக்கலாம் என்று கூறுகிறார். நான் மீண்டும் கோவிலின் செயல் அலுவலரிடம் கேட்டபோது, அவர் விலைப்புள்ளி கொடுத்த ஸ்தபதியிடம் கேட்டு உலோகங்களின் விகிதாச்சாரத்தை அனுப்பினார். 86 சதவீதம் செம்பு, 12 சதவீதம் வெள்ளீயம், 2 சதவீதம் ஈயம் என்று உலோகங்களின் விகிதத்தை அவர் அனுப்பினார்.

இதற்கான செலவு இரண்டேகால் லட்சம் என அவர் குறிப்பிப்பிட்டார். இது தவிர, அந்த சிலையில் ஒரு சதவீதம் வெள்ளியும் 5 சதவீதம் தங்கமும் சேர்க்கலாம். ஆனால், ஜீவ தாதுவான தங்கத்தையும் வெள்ளியையும் தேவஸ்தானமே தரவேண்டுமென அந்த ஸ்தபதி கூறியிருந்தார்.

இதைப் பார்த்த நான், மீண்டும் பூம்புகாரிடம் விலைப்புள்ளி பெறலாம் என்று குறிப்பிட்டேன். இதைப் பார்த்த, சரிபார்ப்புத் துறை விலைப்புள்ளி கொடுத்தவருக்கே பணியைக் கொடுக்கலாம் என்று கூறியது. இதையடுத்து இந்த கோப்பு ஆணையரிடம் சென்றது. பிறகு அந்த ஸ்தபதிக்கு அந்தப் பணியைக் கொடுக்கலாம் என ஆணையர் எழுதினார். ஆகவே, திருப்பணிக்கான கூடுதல் இயக்குனர் என்ற முறையில் நான் அந்தக் கோப்பில் கையெழுத்திட்டேன். ஆணையருக்காக என்று கூறிதான் அந்தக் கையெழுத்தை இட்டேன்.

இதற்கிடையில், சிலையை மாற்றக்கூடாது என ஒரு ரிட் மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், நிபுணர்களின் பரிந்துரையைக் கேட்ட பிறகு, புதிய சிலையை உற்சவங்களுக்கு எடுத்துச்செல்லலாம் என்றும் பழைய சிலையை கோவிலில் வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறி உத்தரவிட்டது.

கோப்புப்படம்

இந்த ஒட்டுமொத்த விவகாரத்திலும் என்னுடைய தவறு என்ன என்பது எனக்குத் தெரியவில்லை.

கே. இந்த சிலை செய்வதற்காக பக்தர்களிடம் தங்கம் காணிக்கையாகப் பெறப்பட்டது. ஆனால், அது சிலையில் சேர்க்கப்படவில்லையென்று ஒரு சர்ச்சை நிலவியது.

ப. 2016 வாக்கில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் படக் கடை வைத்திருப்பவர் ஒருவர் காலி செய்யப்பட்டார். இதையடுத்து அந்த நபர் இம்மாதிரி ஒரு தகவலைப் பரப்ப ஆரம்பித்தார். இதையடுத்து, அந்தக் கோவிலின் செயல் அலுவலர் விளக்கமளித்தார். “இந்தக் கோவிலில் காணிக்கையாக எந்தத் தங்கமும் பெறவில்லை. சம்பந்தப்பட்ட சிலையைச் செய்யும்போது அந்தக் கோவிலின் அர்ச்சகர்கள் தாமாக முன்வந்து 100 கிராம் தங்கத்தை அளித்தனர்” என்று அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது. இவ்வளவுதான் எனக்குத் தெரியும்.

கே. சம்பந்தப்பட்ட சிலையை சோதித்துப்பார்த்தால், அர்ச்சகர்கள் அளித்த தங்கம் இருக்குமா?

ப. இதில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தச் சிலையின் எடை 50 கிலோ. அதாவது ஐம்பதாயிரம் கிராம். அதில் 100 கிராம் தங்கம் எந்த இடத்தில் இருக்கும்? அந்தச் சிலையிலிருந்து எவ்வளவு உலோகத்தை எடுத்து சோதிப்பீர்கள்? தவிர, அதில் உள்ள உலோகங்கள் எல்லாம் வெவ்வேறு கொதிநிலையைக் கொண்டவை. அதில் தங்கத்தைச் சேர்க்கும்போது, தங்கத்தின் கொதிநிலையைவிட அதிக கொதிநிலையைக் கொண்ட உலோகத்தை காய்ச்சினால், தங்கம் என்ன ஆகும் என்பதையெல்லாம் உலோகவியல் கற்றறிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும். இதுவரை இதற்கென தரப்படுத்தப்பட்ட செயல்முறைகள் இல்லை.

நம்முடைய சிலைகளைப் பொறுத்தவரை, அவை செப்புத் திருமேனிகள் என்றுதான் குறிப்பிடப்படும். அவற்றில் தங்கம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்கிறார்கள் தொல்லியலாளர்கள். இதுதவிர, தங்கம், வெள்ளியில் செய்யப்படும் சிலைகள் தனி.

ஆனால், இந்த விவகாரங்கள் எல்லாம் எனக்கு சம்பந்தமில்லாதவை. திருப்பணிக்கான அனுமதி மட்டுமே என் பணி.

கே. இது தவிர, ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இரட்டைத் திருமாளிகை புனரமைக்கப்பட்டது தொடர்பாகவும் உங்கள் மீது ஒரு எஃப்ஐஆர் இருந்தது…

ப. ஆமாம். அதாவது 2013ல் நான் திருப்பணிப் பிரிவின் கூடுதல் ஆணையரானேன். அதற்கு முன்பாக 2011ல் இருந்தே அதே துறையின் இணை ஆணையராக இருந்தேன். நான் அந்தப் பதவிக்கு வருவதற்கு முன்பாகவே பல திருக்கோவில்களின் புனரமைப்புப் பணிகளுக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, கோவில்களின் பட்டியல்களையும் தயார் செய்திருந்தது. அதில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலும் ஒன்று.

அந்தக் கோவிலில் இருந்த இரட்டைத் திருமாளிகையையும் மூன்றாம் பிரகாரத்தையும் புனரமைக்க வருடத்திற்கு 50 லட்சம் வீதம் 4 வருடங்களுக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியை எந்தப் பணத்திலிருந்து கொடுக்கப்போகிறோம், அதாவது கோவிலின் நிதியிலிருந்தா அல்லது வேறு நிதியிலிருந்து கொடுக்கப்போகிறோமா என்பதை முடிவுசெய்வது மட்டும்தான் என் வேலை.

இதற்குப் பிறகு 2013ல் திருப்பணித் துறையின் கூடுதல் ஆணையரானவுடன், இந்தத் திருப்பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பும் எனக்கு வந்தது. அந்தப் பணம் சரியாக செலவழிக்கப்பட்டருக்கிறதா என்பதைப் பார்ப்பது மட்டுதான் என் வேலை.

அதன்படி ஒரு நாள் இரட்டைத் திருமாளிகைப் பணியை ஆய்வுசெய்யப் போனபோது, சில குறைபாடுகள் இருந்ததைக் கண்டறிந்தேன். இதையடுத்து நிபுணர்களை அனுப்பும்படி ஆணையரிடம் கூறினேன். அவரும் ஸ்தபதி, தொல்லியலாளர்கள் ஆகியோரை அனுப்பினார். பிறகு இது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மீண்டும் டெண்டர் விடப்பட்டு பணிகள் முடிந்தன.

சிலை
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் சிதிலமடைந்த இரட்டைத் திருமாளிகை.

இந்த நிலையில்தான் முன்பு சொன்ன படக்கடைக்காரர், இதில் முறைகேடு இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். காவல் துறை புகாரைப் பெற மறுத்துவிட்டது. இதையடுத்து நீதிமன்றத்திற்குச் சென்று புகாரைப் பதிவுசெய்யவைத்தார் அந்த படக்கடைக்காரர். அதில் முதல் குற்றவாளியாக என் பெயர் இருந்தது. என்னுடைய பணி, நிதியை ஒதுக்கீடு செய்வதும் செய்யப்படும் பணியை ஆய்வுசெய்வதும்தான். இதில் தவறு எங்கே நடந்தது?

ஆயிரம் டன் எடையுள்ள தூண்களை திருடி ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அவர் கூறியிருக்கிறார். அப்படியானால், ஒரு டன் தூணுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்குமா? எனக்குத் தெரிந்து அந்த இரட்டைத் திருமாளிகையில் கற்சிலைகள் ஏதும் கிடையாது.

அப்படியே சிலைகள் இருந்தாலும் அந்த மாளிகை பணிகளுக்கும் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? ஒரே ஒரு நாள் ஆய்வுக்குச் சென்றிருக்கிறேன், அவ்வளவுதான். இந்தப் புகாரை மாஜிஸ்ட்ரேட் பதிவுசெய்யச் சொன்னவுடன், ஒரே நாளில் இந்தப் புகார் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து நான் நீதிமன்றத்திற்குச் சென்று தடை வாங்கினேன். உடனடியாக நான் சோமாஸ்கந்தர் சிலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டேன்.

கே. உங்களுடைய மகன் இயக்கிய இரும்புத் திரை திரைப்படத்தையும் உங்கள் மீதான புகாரையும் இணைத்துப் பேசப்படுகிறதே..

ப. என்னுடைய மகன் அந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறான். அவ்வளவுதான். படத்தைத் தயாரித்தது விஷால்தான். அவர் அதற்காக சம்பளம் பெற்றார். அவ்வளவுதான். இந்தப் படத்தின் தயாரிப்புச் செலவு 23 கோடி ரூபாய். 2013ல்தான் கூடுதல் ஆணையரானேன். அதற்குள் 23 கோடி ரூபாய் சம்பாதித்துவிட முடியுமா? அதை யாருக்கும் தெரியாமல் வைத்து படம் தயாரித்துவிட முடியுமா? இந்தக் கதையை என் மகன் சொல்லாத தயாரிப்பாளர் கிடையாது. நான்கு ஆண்டுகள் படாதபாடுபட்டு இந்த வாய்ப்புக் கிடைத்தது.

இதுபோக, என் பெண் ஆஸ்திரேலியாவில் படிப்பதை இழுக்கிறார்கள். நான் என் வீட்டை அடகுவைத்து 30 லட்ச ரூபாய் கடன் வாங்கி படிக்க அனுப்பியிருக்கிறேன். இதையெல்லாம் ஒன்றாக இணைத்து குற்றம்சுமத்துகிறார்கள். இதற்கெல்லாம் சூத்திரதாரி யார் எனத் தெரியவில்லை.

கே. நீங்கள் கைதுசெய்யப்பட்ட பிறகு, உங்களை இடைநீக்கம் செய்ய அறநிலையத் துறை பல நாட்கள் எடுத்துக்கொண்டது ஏன்?

ப. சட்டத்தைப் பொறுத்தவரை, ஒருவர் 48 மணி நேரத்திற்கு மேல் நீதிமன்றக் காவலில் இருந்தால், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவே கருதப்படுவார். இதற்கென தனியாக ஆணை பிறப்பிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால், இடைநீக்க ஆணை வராததால் வரவேண்டிய பாதி சம்பளமும் வரவில்லை. இதையடுத்து நானேதான் இடைநீக்க ஆணையைக் கேட்டு வாங்கினேன்.

கே. இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கோவில்களிலிருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறது, ஆனால், சரியாக கோவில்களைப் பராமரிப்பதில்லை என்ற புகார் இருக்கிறது.

ப. இந்தத் துறையைப் பற்றி பலருக்கும் தவறான புரிதல் இருக்கிறது. ஏதோ கோவில்களைக் கைப்பற்றி, கோவிலுக்கு வரும் பணத்தை எடுத்துக்கொள்வதாக நினைக்கிறார்கள். இந்து அறநிலையத் துறைச் சட்டப்படி, பொதுமக்கள் வரக்கூடிய கோவில் இருந்தால் அந்தக் கோவில், சட்டம் கூறும் ஷரத்துகளின்படி நடத்தப்பட வேண்டும். அப்படி நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பதுதான் அதிகாரிகளின் வேலை. புதிதாக கோவில்களைக் கட்டுவது எங்கள் பணி அல்ல. கோவில்களைப் பொறுத்தவரை அறங்காவலர்கள்தான் முக்கியமானவர்கள்.

கோப்புப்படம்

இவர்கள் கௌரவத்தின் அடிப்படையில் இந்தக் கோவில்களை நிர்வகிக்கிறார்கள். ஊதியமின்றி முழு நேரத்தையும் அவர்களால் கோவிலில் செலவழிக்க முடியாது. ஆகவேதான் அவர்களின் பணியைச் செய்ய செயல் அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அந்த செயல் அலுவலர்கள் அறங்காவலர் குழுவின் தீர்மானத்தை பெற்று, அவை சட்டப்படி இருக்கும்பட்சத்தில் அதை செயல்படுத்துவார்கள்.

இந்த அறங்காவலர்களுக்குத்தான் ஊழியர்களை நியமிக்கும் உரிமை, தண்டிக்கும் உரிமை ஆகியவை உண்டு. செயல் அலுவலருக்கு அல்ல. இந்த விவரங்கள் பொதுமக்களுக்குத் தெரியாததால், எல்லாக் குற்றச்சாட்டுகளையும் துறை மீது சுமத்துகிறார்கள்.

கே. இந்துக் கோவில்களில் கிடைக்கும் பணத்தை – உண்டியலில் கிடைக்கும் பணம், நில வருவாய் – அரசு எடுத்துக்கொண்டு, நலத்திட்டங்களுக்குச் செலவழிப்பதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது..

ப. ஒரு கோவிலுக்குக் கிடைக்கும் நிதியை அந்தக் கோவிலுக்கு மட்டும்தான் செலவழிக்க முடியும். அடுத்த கோவிலுக்குகூட கொடுக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு அந்தக் கோவிலின் செலவு போக கூடுதலாக பணம் கிடைக்கும்போது அதை எப்படி செலவழிக்கலாம் என்பதற்கு விதிகள் இருக்கின்றன. வேதாகம பள்ளிகள் நடத்த, தேவார வகுப்புகள் நடத்த, அன்னதானம் செய்ய என ஒரு பட்டியல் இருக்கிறது.

நம்முடைய அரசைப் பொறுத்தவரை, அது ஒரு மதச் சார்பற்ற அரசு. இருந்தபோதும் இந்தத் துறையின் விதி எண் 10ன் படி இந்துக்கள் மட்டும்தான் இந்தத் துறையில் வேலைசெய்ய முடியும். ஆனால், வரி செலுத்துபவர்கள் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நாத்திகர்கள் இருக்கிறார்கள். ஆகவே அந்த வரிப் பணத்தை எடுத்து இந்துக்கள் மட்டும் பணியாற்றும் ஒரு துறைக்கு செலவழிக்க முடியாது என்பதால், ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதாவது எந்தக் கோவில்களில் எல்லாம் கூடுதல் வருவாய், அதாவது வரி செலுத்தக்கூடிய வருவாய் இருக்கிறதோ அந்தக் கோவில்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இந்தத் துறையை நடத்த அளிக்க வேண்டும். இந்தக் கூடுதல் வருவாய் என்பது எத்தனை கோவில்களில் இருக்குமென நினைக்கிறீர்கள்? துறையின் வசமுள்ள சுமார் 38,000 கோவில்களில் வருடத்திற்கு 10,000 கீழ் வருவாயுள்ள கோவில்கள் முப்பத்தி நான்காயிரம் கோவில்கள். பத்தாயிரத்திற்கு மேலாக, 2 லட்ச ரூபாய் வரை வருவாயுள்ள கோவில்கள் சுமார் 2 ஆயிரம் இருக்கும். 2 லட்சத்திற்கு மேல் – 10 லட்சத்திற்குள் வருவாயுள்ள கோவில்கள் சுமார் 640. அதற்கு மேல் வருவாய் உள்ளவை 340 கோவில்கள். மொத்தமாக சுமார் ஆயிரத்திலிருந்து ஆயிரத்து ஐநூறு கோவில்களுக்கு மட்டுமே கூடுதல் வருவாய் இருக்கும். இந்த கூடுதல் வருவாயுள்ள கோவில்கள், அந்த கூடுதல் வருவாயில் அளிக்கும் சிறிதளவு தொகையில்தான் இந்த துறை நடத்தப்படுகிறது.

கே. இந்தத் துறையில் இந்துக்கள் அல்லாதவர்கள் பணியாற்ற முடியுமா?

ப. நிச்சயமாக முடியாது. இந்தத் துறைக்கு ஆட்களைத் தேர்வுசெய்வது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். அவர்கள் தேர்வுசெய்து, இந்துக்களா என பரிசோதித்துத்தான் அனுப்புவார்கள்.

கே. இந்துக் கோவில்களின் பணத்தை வசூலிக்கும் இந்தத் துறை, சிதிலமடைந்த கோவில்களைக் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

ப. இந்துக் கோவில்களின் பணத்தை துறை எடுப்பதில்லை என்பதற்கு முன்பே விளக்கமளித்துவிட்டேன். கோவில்கள் இத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன, அவ்வளவுதான். இந்த 38000 கோவில்களையும் நிர்வகிக்க சுமார் 650 செயல் அலுவலர்களே இருக்கிறார்கள். அதிலும் 250 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த நிலையில், வருவாய் இல்லாத கோவிலுக்கு அறங்காவலராக இருக்க யாரும் முன்வராவிட்டால், இந்த செயல் அலுவலர்களே அந்தக் கோவில்களுக்கு தக்காராகவும் இருந்து செயல்பட வேண்டும். இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்த பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே வருவாய் உள்ள கோவில்கள் எல்லாம் சிறிய கோவில்கள் என்று நினைக்காதீர்கள். அவற்றில் மிகப் பெரிய கோவில்களும் உண்டு.

உதாரணமாக வேதாரண்யம் கோவிலை எடுத்துக்கொள்வோம். அந்தக் கோவிலுக்குச் சொந்தமாக 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. இன்றும் இருக்கிறது. ஆனால், அந்தக் கோவில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கோவிலில் நிதி இல்லை. இந்த இருபத்தைந்தாயிரம் ஏக்கர் நிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் உப்பளங்களாக இருக்கின்றன. இதிலிருந்து வெறும் நான்காயிரத்து ஐநூறு ரூபாய் மட்டுமே உப்புக்கான கமிஷனாக வருகிறது.

அந்தக் காலத்தில் இந்த இடத்தை குத்தகைக்கு விடும்போது, குத்தகைத் தொகையாக வருடத்திற்கு 24 களஞ்சு பொன் கொடுக்க வேண்டுமென உத்தரவு. அந்த காலத்தில் 24 களஞ்சு தங்கத்தின் மதிப்பு 4500 ரூபாய். அதையே இப்போதுவரை செலுத்திவருகிறார்கள். இதை எதிர்த்து நான் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன். 11 ஆண்டுகளாகிவிட்டன. இன்னும் வழக்குத் தீர்க்கப்படவில்லை. இப்படித்தான் கோவில் சொத்துகள் யார் யாராலோ அனுபவிக்கப்படுகின்றன. ஆனால், பழி இந்தத் துறை மீது விழுகிறது.

இந்தக் கோவிலுக்குச் சொந்தமான 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சர்வே செய்து தரும்படி அரசுக்கு மூன்று முறை பணம் கட்டப்பட்டிருக்கிறது. இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. தஞ்சைப் பகுதிகளில் பல பழைய கோவில்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கும். ஆனால், யாரோ அனுபவித்துக்கொண்டிருப்பார்கள். திருவாரூர் ஊரே, கிட்டதட்ட கோவில் நிலம்தான்.

இதில் சுமார் 17 தனியார் கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் யாரும் இந்தக் குத்தகைத் தொகையை சரியாக செலுத்துவதில்லை. கோவில் அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார்கள். ஆனாலும் பணத்தை வசூலிக்க முடியவில்லை.

திருவரங்கம் கோவிலில் கோவிலுக்குச் சொந்தமான 320 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலங்களை வேறு யாருக்கும் பதிவுசெய்யக்கூடாது என பதிவுத் துறைக்கு எழுதினேன். இந்த நிலங்கள் கோவிலுக்கு உடைமையானவை என பெயர் மாற்றம் செய்ய படாதபாடு பட வேண்டியிருந்தது. பல முறை வழக்குத் தொடுக்கப்பட்டது. பிறகு இரு அதிகாரிகள் பல நாட்கள் அமர்ந்து பெயரை மாற்றினார்கள். நிர்வாக ரீதியாக இப்படி பிரச்சனைகள் இருக்கும்போது, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மீது பழியைச் சுமத்துவது எப்படி சரியாக இருக்கும்? -BBC_Tamil

TAGS: