சபரிமலை: சபரிமலைக்கு வந்த இரு பெண்களைத் திரும்பிச் செல்ல கேரள அரசு உத்தரவிட்ட நிலையில் அவர்கள் இருவரும் திரும்பிச் செல்ல முடிவு செய்தனர். அவர்களை போலீஸார் பாதுகாப்புடன் திரும்ப அழைத்துச் சென்றனர்.
ஆந்திராவைச் சேர்ந்த கவிதா என்ற பெண் பத்திரிகையாளரும், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ரெஹனா பாத்திமா என்ற பெண் செயல்பாட்டாளரும் சபரிமலைக்கு வந்தனர்.
இருவரும் ஹெல்மட் அணிந்து, போலீஸ் சீருடை போன்ற உடையில் வந்தனர். இருவருக்கும் கிட்டத்தட்ட 200 போலீஸார் பாதுகாப்புக் கொடுத்து, கவச உடை, துப்பாக்கி சகிதம் பாதுகாப்பு கொடுத்து அழைத்து வந்தனர். பம்பையிலிருந்து இவர்கள் சன்னிதானம் வந்தனர். நடைப்பந்தல் வரை வந்து விட்ட இவர்கள் அங்கிருந்து 10 நிமிட தூரத்தில் உள்ள 18ம் படியை அடைந்து கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
பக்தர்கள் போராட்டம்
ஆனால் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு முன்பு கூடி அமர்ந்து போராட்டத்தில் இறங்கினர். இரு பெண்களையும் அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டனர். இதனால் பரபரப்பு கூடியது. போராட்டம் நடத்தியவர்களுடன் கிரைம் பிராஞ்ச் ஐஜி எஸ் ஸ்ரீஜித் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை. இறங்கியுள்ளனர். இரு பெண்களையும் அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டனர். அவர்களுடன் கிரைம் பிராஞ்ச் ஐஜி எஸ் ஸ்ரீஜித் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
பக்தர்களை விரட்டும் திட்டமில்லை
போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பக்தர்கள் என்பதாலும், சிறார்கள் நிறையப் பேர் இருப்பதாலும் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்திக் கலைக்கும் திட்டம் இல்லை என்று போலீஸார் தெளிவாக கூறி விட்டனர். போராட்டக்காரர்கள் இறங்கி வராததால் இரு பெண்களையும் அருகே உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து ஐஜி ஸ்ரீஜித் பேச்சுவார்த்தை நடத்தினார்.
2 பெண்களுக்கும் அமைச்சர் கண்டனம்
மறுபக்கம், போராட்டக்களம் அல்ல சபரிமலை. அது வழிபாட்டுத் தலம். பக்தர்கள் மட்டுமே அங்கு செல்லலாம். பத்திரிகையாளர்களுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும் இடமில்லை. எனவே இரு பெண்களும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியிருந்தார்.
பக்தர்கள் மட்டுமே வரலாம்
இரு பெண்களின் பின்னணி குறித்துத் தெரியாமல் போலீஸார் ஏன் பாதுகாப்பு கொடுத்து சன்னிதானம் வரை அழைத்துச் சென்றனர் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் தான் பக்தராக மட்டுமே வந்துள்ளதாகவும், இதற்காக கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து விரதம் உள்ளிட்டவற்றை கடைப்பிடித்துள்ளதாகவும் எர்ணாகுளம் பெண் தெரிவித்திருந்தார்.
திரும்பிச் செல்ல 2 பெண்கள் முடிவு
ஐஜி பேச்சுவார்த்தையின்போது போராட்டக்காரர்கள் பிடிவாதமாக இருப்பதாகவும், சபரிமலை சன்னிதானத்திற்குள் பக்தர்களைத் தவிர மற்றவர்களை அனுமதிக்க இயலாத நிலை இருப்பதையும் இரு பெண்களிடம் விவரித்தார். இதையடுத்து இரு பெண்களும் தாங்கள் திரும்பிச் செல்வதாக தெரிவித்தனர். ,தாங்கள் பத்திரமாக போய்ச் சேரும் வரை பாதுகாப்பு அளிக்கவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கு ஐஜி உத்தரவாதம் அளித்தார். இதைத் தொடர்ந்து இரு பெண்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து கிளம்பினர். இதனால் காலை முதல் நிலவி வந்த பதட்டம், பரபரப்பு முடிவுக்கு வருகிறது.