சபரிமலைக்கு வந்த மூன்றாவது பெண்ணையும் திருப்பி அனுப்பியது போலீஸ்

சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்ல முயன்ற தெலுங்கு தொலைக்காட்சி பத்திரிகையாளர் கவிதா, செயற்பாட்டாளர் ரெஹானா ஃபாத்திமா ஆகியோர் சன்னிதானத்துக்கு அருகே சென்று, பதற்ற நிலை காரணமாக திரும்பி வந்ததை அடுத்து, கோயிலுக்குச் செல்ல பாதுகாப்பு கோரி வந்த மேரி சுவீட்டி என்ற மூன்றாவது பெண்ணையும் போலீசார் பாதுகாப்போடு வீட்டுக்குத் திருப்பி அனுப்பினர்.

முன்னதாக போலீசாரை அணுகிய மேரி சுவீட்டி, “நான் திருவனந்தபுரத்திலிருந்து வருகிறேன். வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வரும் நான் மதச்சார்பற்றவள். எனக்கு மூன்று மதங்களிலும் நம்பிக்கை உள்ளது. எனக்கு 46 வயதாகிறது. நான் ஒரு சாதாரண பக்தை மட்டுமே. ஐய்யப்பனை பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் சமூக செயல்பாட்டாளர் கிடையாது,” என்கிறார் அவர்.

ஆனால், கோயில் சன்னிதியில் தற்போது நிலவும் பரபரப்பான சூழலை விளக்கிய கேரளா போலீசார் மேரியை தற்காலிகமாக பம்பையிலுள்ள போலீஸ் சோதனைச்சாவடியில் தடுத்து வைத்துள்ளனர்.

முன்னர், சபரிமலைக்கு இளம் பெண்கள் செல்வதற்கு கடுமையான எதிர்ப்பு தொடரும் நிலையில், 100 போலீசார் துணையோடு ஐயப்பன் சன்னிதானத்துக்கு மிக அருகே சென்ற ஹைதராபாத்தை சேர்ந்த மோஜோ டிவி செய்தியாளர் கவிதா ஜக்காலா போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பையும், போலீசாரின் வேண்டுகோளையும் ஏற்று பின்வாங்கினார்.

கவிதாவும், சன்னிதியை நெருங்கிய இன்னொரு செயற்பாட்டாளர் ரெஹானா ஃபாத்திமாவும் தற்போது போலீஸ் பாதுகாப்புடன் மலையில் இருந்து கீழே இறங்குகிறார்கள்.

கவிதா தமது பணி நிமித்தம், அதாவது, செய்தி சேகரிக்கவே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

போலீசார் புடை சூழ சன்னிதானத்துக்கு அருகே உள்ள நடைப்பந்தல் என்ற இடத்தை அவர்கள் அடைந்துவிட்டார். அங்கே குவிந்திருக்கும் போராட்டக்காரர்களுடன் பாதுகாப்புக் குழுவுக்குத் தலைமை வகிக்கும் ஐ.ஜி. ஸ்ரீஜித் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சபரி மலையில் கோயிலுக்கு பெண்கள் வருவதை எதிர்த்துப் போராட்டம்.சபரிமலை கோயிலுக்கு பெண்கள் வருவதை எதிர்த்துப் போராட்டம்.

போராட்டம் நடத்துவதை தாங்கள் தடுக்கவில்லை என்றும், ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் சன்னிதானம் வரும் பெண் பத்திரிகையாளருக்கு பாதுகாப்பு கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். போராட்டக்காரர்களை ஒரு ஓரமாக நின்று போராடும்படியும் அவர் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், போராட்டக்காரர்கள் விடாப்பிடியாக இருப்பதை அடுத்தும், அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவுவதை அடுத்தும், பத்திரிகையாளர் கவிதாவை அழைத்து போலீசார் திரும்பிச் செல்லும்படி கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

செயற்பாட்டாளர் பலத்தை காட்டுமிடமல்ல: அமைச்சர் கருத்து

இதனிடையே இது குறித்துப் பேசிய கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் “இரண்டு பேர் வந்துள்ளனர். வந்தவர்களில் செயற்பாட்டாளர் ஒருவர் இருக்கிறார் என்று எண்ணுகிறோம்.

இதுபோல செயற்பாட்டாளர்கள் தங்களின் சக்தியை காண்பிக்கும் இடமாக இந்த இடத்தை மாற்றவேண்டாம். அதை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. உண்மையான பக்தர்கள் வரும் புண்ணிய பூமி இது. உண்மையான பக்தர்கள் வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும். ஆனால் வருபவர்களில் பக்தர்ககள் யார், செயற்பாட்டாளர் யார் என்று தீர்மானிப்பது அரசாங்கத்துக்கு சிக்கலான நடைமுறை” என்று கூறினார்.

போராட்டத்தில் மேல் சாந்திகள்

ஒருபுறம் பெண்கள் கோயில் நுழைவதை எதிர்ப்பவர்கள் போராட்டம் நடத்தும்போது, அவர்களோடு சபரிமலை கோயில் மேல் சாந்திகளும் (பூசாரிகள்) சேர்ந்துகொண்டனர். சுமார் 30 மேல் சாந்திகள் இந்தப் போராட்டத்தில் சேர்ந்துள்ளதோடு, பெண்கள் சன்னிதானத்துக்கு வந்தால் தங்களால் பூஜை செய்ய முடியாது என்றும் தெரிவித்தனர்.

தற்போதை நடை திறந்துள்ளது. ஆனால், மேல்சாந்திகள் அங்கு இல்லை.

போலீசார்

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்வதற்கு இருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கியதை அடுத்து தற்போது முதல் முறையாக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக, கோயிலுக்கு வர முயற்சித்த பல இளம் பெண்கள் வரும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து கோயிலுக்கு தமது தொழில் நிமித்தம், அதாவது செய்தி சேகரிக்கச் செல்ல, கவிதா முயன்றார்.

வியாழக்கிழமை மலைக்கு செல்ல முயற்சித்த சுஹாசினி என்ற பெண் பத்திரிகையாளர் மற்றும் அவரோடு வந்த ஒளிப்பதிவாளர் இருவரும் பாதிவழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பக்தர்களோடு கலந்திருந்த போராட்டக்காரர்களின் அச்சுறுத்தல் காரணமாக, அந்த பெண் பத்திரிகையாளர் சன்னிதானத்திற்கு செல்லமுடியவில்லை.

சுஹாசினியை தடுத்த நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது கோயிலுக்கு வந்த பத்திரிகையாளர் கவிதாவிற்கு தலைக்கவசம் மற்றும் புல்லட் ப்ரூப் ஜாக்கெட் அணிவித்து கோயிலை நோக்கி கூட்டிச்சென்ற போலீசார் தற்போது அவரை கீழே அழைத்துவருகின்றனர்.

பின்வாங்கியது ஏன்? கவிதா விளக்கம்

மலையில் இருந்து திரும்பிய நிலையில் உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய செய்தியாளர் கவிதா, “சாமியை தரிசிக்க வேண்டும் என்றுதான் நான் சென்றேன். ஆனால், ஐயப்ப பக்தர்கள் தங்களோடு அழைத்து வந்திருந்த குழந்தைகளை தூக்கி காட்டி எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த குழந்தைகளின் நலன் கருதிதான் நாங்கள் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்ற முடிவை கைவிட்டுவிட்டோம்.” என்றார்.

கவிதாவுடன் சென்ற கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலரும், மாடலுமான ரெஹானா ஃபாத்திமா ஊடகங்களிடம் பேசுகையில், “நான் உண்மையான ஐய்யப்ப பக்தை. ஐய்யப்பனை தரிசிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். சன்னிதிக்கு மிக அருகில் சென்றதை நான் பெருமையாக கருதுகிறேன். எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் உண்மையான ஐயப்ப பக்தர்களா என்பது தெரிய வேண்டும்.” என்றார். -BBC_Tamil

TAGS: