திருவனந்தபுரம்: சபரிமலையில் போராட்டம் தொடர்ந்தால், உயிரிழப்பு, காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சிறப்பு கமிஷனர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறி உள்ளார்.
போராட்டம்
சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்ல முயன்றனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். போராட்டத்தை தொடர்ந்து ஆலோசனை நடத்திய தேவசம் போர்டு, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனக்கூறி இருந்தது. தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்கள் மீது நவ.,13ம் தேதி அன்று விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்து உள்ளது.
கூட்ட நெரிசல்
இந்நிலையில், சபரிமலைக்கான சிறப்பு கமிஷனர் மனோஜ் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், அடுத்த மாதம் திருவிழா நேரத்தில், சபரிமலையில் அதிகளவில் கூட்டம் கூடும். அப்போது, போராட்டம் தொடர்ந்தால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, போலீசார், பக்தர்கள் மற்றும் சிலருக்கு உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
ஸ்மிருதி இராணி கருத்து
சபரிமலை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறியதாவது: நான் மத்திய அமைச்சராக இருப்பதால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக பேச முடியாது. ஒரு அடிப்படை அறிவுடன், நாம், நமது நண்பர்கள் வீட்டிற்கு ரத்தம் படிந்த நாப்கின்களுடன் செல்வோமா? நிச்சயம் மாட்டோம். ஆனால், அதை சபரிமலைக்கு எடுத்து செல்வதை சரி என்று நினைக்கிறீர்களா? இது தான் வித்தியாசம். எனக்கு கோயிலுக்கு செல்ல உரிமை உள்ளது. ஆனால், அதன் புனிதத்தன்மையை கெடுக்க உரிமை இல்லை. இந்த வித்தியாசத்தை புரிந்து கொண்டு அதற்கு அங்கீகாரமும், மரியாதையும் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-dinamalar.com