மங்களூரு, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் கடல் பகுதியில் தமிழக மீனவர்கள், மாநில அரசால் தடை செய்யப்பட்ட மீன்களை பிடிப்பதாகவும், இதனால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுபற்றி உல்லால் பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறினர். அதன்பேரில் மீன்வளத்துறை அதிகாரி சிக்க வீரநாயக், நேற்று முன்தினம் கடலோர காவல்படையினருடன் சேர்ந்து உல்லால் கடல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு 6 விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் வந்தனர். இதையடுத்து அவர்களுடைய விசைப்படகுகளில் அதிகாரி சிக்க வீரநாயக்கும், கடலோர காவல் படையினரும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தமிழக மீனவர்கள், கர்நாடக மாநில அரசால் தடை செய்யப்பட்ட மீன்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 30 தமிழக மீனவர்களை கடலோர காவல் படையினர் பிடித்தனர். அவர்களுடைய 6 விசைப்படகுகளும், அதில் இருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றி தமிழக மீனவர்களிடம், கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-dailythanthi.com