முல்லை பெரியாறு அணைக்கு மாற்றா!!! இப்போதாவது தமிழக அரசு விழிக்குமா???

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளது கர்னல் பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை உள்ளது.

தென்தமிழகத்தில் உள்ள தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் இருந்து வருவதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பென்னிகுயிக்கை தெய்வமாக வணங்கியும் வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திடீரென முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக கூறி கேரளா அரசுக்கு அனுமதி வாங்கியுள்ளது.

கடந்த 123 ஆண்டுகளுக்கு முன்பு கர்னல் பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை பழமையாக இருந்தாலும் அணை பலமாக இருக்கிறது என்று ஆய்வு அறிக்கை மூலம் சுப்ரீம் கோர்ட்டே சான்றிதழ் கொடுத்து  இருக்கிறது. அதோடு உலகிலையே மற்ற அணைகளை விட முல்லைப் பெரியாறு அணைதான் பலமாக  இருக்கிறது  என்ற பேச்சும் இருந்து வருகிறது. அப்படி இருக்கும்போது கேரள அரசு இந்த முல்லைப்பெரியாறு அணை பழமையாக இருப்பதால் அது உடைந்தால் கேரளா மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என்று தொடர்ந்து  கூறி வந்தது.

இந்த நிலையில்தான் கடந்த மாதம் பெய்த மழையால் கேரளாவில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரிதும் தவித்து வந்தனர்.  அப்படி இருந்தும்கூட தென் மேற்கு பருவமழை பெய்யாததால் ஒரு சொட்டு தண்ணீர் கூட முல்லைப் பெரியாறு அணைக்கு வரவும் இல்லை வெளியே  போகாமல் இருந்து வந்த நிலையில்தான் திடீரென பெய்த மழையால்  அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியது   அப்படி இருந்தும் கேரள  அரசு 142 அடிக்கு தண்ணீரை தேக்க வேண்டாம் 136 அடியாக குறைக்க சொல்லி தமிழக  அரசை வலியுறுத்தியும் தமிழக  அரசான எடப்பாடி அரசு செவிசாய்க்கவில்லை.

இந்த நிலையில் தான் திடீரென கேரள அரசு சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது  என்பதை  காரணம் காட்டி முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக வேறு அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை கேரள அரசு நாடியது.

அதன் அடிப்படையில் தான் முல்லைப் பெரியாறு அணையில்  புதிய அணை கட்டுவதற்கான சாத்தியகூறுகள்  குறித்து  ஆய்வு நடத்த கேரளவுக்கு ஏழு நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திடீரென அனுமதி வழங்கியுள்ளது.  ஆனால்  இந்த ஏழு நிபந்தனைகளில் ஒன்று புதிய அணை கட்ட வேண்டும் என்றால்  தமிழக அரசிடம் அனுமதி வாங்க வேண்டும், ஏன் என்றால் முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தம் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இருந்தாலும் கடந்த 2014 ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் அனுமதி வழங்கி இருப்பதால் அதை எதிர்த்து இந்த  எடப்பாடி அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தமிழக உரிமையை நிலைநாட்ட முன் வர வேண்டும் எனபதை தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

-nakkheeran.in

TAGS: