இன்னும் 39 நாள்தான்.. பொன் மாணிக்கவேலிடம் சிக்கி சிதற போவது யார் யார்!

சென்னை: சிலை திருட்டுப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்னும் 39 நாட்களில் ஓய்வு பெறவுள்ளார். அதற்குள் அவர் அதிரடியான நடவடிக்கைகளை வேகப்படுத்துவார் என்ற பெரும் பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நம் நாட்டில் மதங்களை சார்ந்த கலைப்பொக்கிஷங்களும் காலகாலத்துக்கும் மதிக்கப்பட்டும், மரியாதைக்குரியதாக வணங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில காலங்களாகவே கோயில் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிட்டது.

தெய்வம் என மதிக்கப்படக்கூடிய கலைச்செல்வங்களான சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது வெட்ட வெளிச்சமாக தொடங்கியது. இதனை சிறப்பாக கையாளக்கூடியவர் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்தான் என்று நீதிமன்றமே சொன்னது.

சுறுசுறுப்பு வேட்டைகள்

நாளுக்கு நாள் அதிரடிகளும், சுறுசுறுப்பு வேட்டைகளும் தொடங்கியது. நாடு கடத்தப்படும் சிலைகளும், சர்வதேச அளவில் இந்த குற்றங்களை செய்தவர்களும் ஒன்றன் பின் ஒருவராக கைதாக தொடங்கினர். ஆனால் பொன்.மாணிக்கவேலுவின் கைது நடவடிக்கைக்கு தடைகள் பல அதிகார துஷ்பிரயோக ரூபத்தில் வர ஆரம்பித்தன.

பலமான அஸ்திவாரம்

அப்பழுக்கற்றும், நேர்மையாகவும் யார் இருந்தாலும் வயிற்றெரிச்சல்களுடன் கூடிய இடையூறுகள் வரத்தானே செய்யும். பொன்.மாணிக்கவேல் இதுவரை கண்டுபிடித்த கொள்ளைகள் ஒன்றும் சாதாரண அளவிலோ, குறுகிய காலத்திலோ செய்யப்பட்டவை அல்ல. அவை ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் வேரூன்றி இருந்த கடத்தல்கள். பலமாக பின்னணியின் அஸ்திவாரத்துடன் நடைபெற்ற கடத்தல்கள்.

கேள்வி கணைகள்

அதில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறப்பட்டது. அதனால்தான் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றிவிட துடிதுடிப்பு ஏற்பட்டது. ஏன் இவ்வளவு துடிப்பு… பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படவில்லையா என்ன? என்று பல்வேறு கேள்விகணைகள் பொதுமக்களிடமிருந்து எழுந்தது. நீதிமன்ற உத்தரவிட்டு பணியமர்த்தப்பட்டவர் பொன்.மாணிக்கவேல்.

பீதியிலே உறைந்தனர்

ஆனால் நீதிமன்ற உத்தரவையே மீறி சிபிஐதான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் மனோபாவம் நம் தமிழகத்தில்தான் நடக்கும். நிறைய கோடிக்கணக்கான முறைகேடு சம்பவங்கள் அணிவகுத்து கிடந்ததை வெளிச்சம் போட்டு காட்ட, காட்ட…. மடியில் கனம் உள்ளவர்கள் பீதியிலேயே உறைந்து கிடக்க ஆரம்பித்தார்கள்.

39 நாட்கள்தான்

இப்போதுகூட திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள உலோகச் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் தன் ஆய்வினை தொடர்ந்து வருகிறார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்.மாணிக்கவேல், “என்னுடைய பணிக்காலம் இன்னும் 39 நாள்களில் நிறைவடைகிறது. அதற்குள் என்னால் முடிந்தவரை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்” என்று சொன்னார்.

செய்வார்களா?

ஒருவேளை 39 நாளில் பணி நிறைவடைந்து சென்றுவிட்டால், இதுபோன்ற ஒரு திறமையான அதிகாரி நமக்கு கிடைப்பது இன்றைய காலகட்டத்தில் அரிதானதே. எனவே பொன்னும், மாணிக்கமும் கலந்து கிடைத்துள்ள பொன்.மாணிக்கவேலின் பதவி காலத்தை மேலும் நீட்டித்தால் மிகவும் நன்றாக இருக்கும். செய்வார்களா.. ஆட்சியாளர்கள் செய்வார்களா!

tamil.oneindia.com

TAGS: