சபரிமலை: சபரிமலை சன்னிதானத்தில் போராட்டக்காரர்களை எதிர்கொள்ளும் வகையில், ஊழியர்கள் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியினரை களமிறக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.கேரளாவில், உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களும் செல்ல, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.
இந்நிலையில், சபரிமலையில், ஐப்பசி மாத பூஜையின் போது, தரிசனத்துக்காக, 15 பெண்கள் வந்தனர். போலீஸ் பாதுகாப்பு கொடுத்த போதும், பக்தர்கள் எதிர்ப்பால், ஒருவர் கூட சன்னிதானம் செல்ல முடியவில்லை; இது அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.இது தொடர்பாக, அரசுக்கு போலீஸ் தரப்பில் அறிக்கை கொடுக்கப்பட்டது. அதில், ‘பாதுகாப்பு கொடுத்து பெண்களை அழைத்துச் சென்றும் போலீசாருக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஒருவர் கூட இல்லை’ என, குறிப்பிடப்பட்டு இருந்தது.இதைத் தொடர்ந்து, அடுத்த முயற்சியில், மாநில அரசு இறங்கியுள்ளது.
ஊழியர்கள் என்ற பெயரில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்களை, சன்னிதானத்தில் தங்க வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில், 1,600 – 2000 பேர், தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுவர். காணிக்கை எண்ணுதல், பக்தர்களுக்கு குடிநீர் வழங்குதல், தங்கும் விடுதிகளில் உதவி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவர்.இவர்களுக்கு தங்கும் இடம், உணவுடன், தினக் கூலியாக, 400 ரூபாய் வழங்கப்படும். தற்போது, ‘தற்காலிக பணியாளர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்’ என, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போராட்டக்காரர் களை எதிர்கொள்ள முடியும் என அரசு கருதுகிறது.
ராஜினாமா செய்கிறார் தேவசம்போர்டு தலைவர்?
திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி உள்ளது.’நான் அய்யப்ப பக்தன். என் குடும்ப பெண்கள் யாரும் சபரிமலை செல்ல மாட்டார்கள்’ என, பத்மகுமார் கூறியிருந்தார். இதனால், அவர் மீது, முதல்வர் பினராயி விஜயன் கடும் கோபத்தில் உள்ளார்.பத்மகுமாரை சந்திக்கவும் மறுத்து வருகிறார். இதனால், அவர் ராஜினாமா செய்வார் என தகவல் பரவி வருகிறது.தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் அடங்கிய தேவசம் போர்டில், ஒரு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. தலைவரும் ராஜினமா செய்து விட்டால், நெருக்கடிஅதிகரிக்கும். பின், முதல்வர் பினராயி விஜயன் ஆதரவாளர்கள் மட்டுமே, அந்த பதவியில் நியமிக்கப்படுவர்.
முதல்வருக்கு நெருக்கடி
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, 1991-ல், கேரள உயர் நீதி மன்றத்தில், ஒரு வழக்கு நடந்தது. அப்போது, திருவாங்கூர் தேவசம்போர்டு சார்பில், நீதிமன்றத்தில், சத்திய வாக்குமூலம் அளிக்கப்பட்டது.அதில், ‘சபரிமலை ஆசாரங்கள் தொடர்பான விஷயங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தந்திரிக்கு தான் உண்டு. கோவில் நிர்வாக அதிகாரம் மட்டுமே தேவசம்போர்டுக்கு உண்டு’ என, கூறப்பட்டிருந்தது. இதை, அப்போதைய முதல்வர் நாயனார் தலைமை யிலான இடது ஜனநாயக முன்னணி அரசு எதிர்க்கவில்லை.
இந்த வழக்கில்தான் கேரள உயர் நீதிமன்றம், 10 – 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை செல்வதை தடை செய்து, உத்தரவிட்டது. 27 ஆண்டுகளுக்கு பின், தற்போது உச்ச நீதிமன்றம் பெண்களை அனுமதித்துள்ளது.இடது ஜனநாயக முன்னணி அரசு காலத்தில், தேவசம்போர்டு தாக்கல் செய்த இந்த வாக்குமூலம் காரணாக, தந்திரியின் அதிகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘தந்திரிக்கு அதிகாரம் இல்லை’ என கூறிய, தற்போதைய முதல்வர் பினராயி விஜயனுக்கு, இதனால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-dinamalar.com