பிரதமர் மோதிக்கு சோல் அமைதி விருது – எதிர்த்து தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்

இந்தியப் பிரதமர் மோதிக்கு “சோல் அமைதி விருது” (Seoul Peace Prize) வழங்கப்பட்டதை எதிர்த்து தென் கொரியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்கொரிய தலைநகர் சோலில் கொரிய மனித உரிமைகள் குழு, ஆசிய தகுதி அமைப்பு மற்றும் அரசு சாரா மனித பாதுகாப்பு குழு என பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்திய பிரதமர் மோதி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் “சியோல் அமைதி விருது”க்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தென்கொரியாவில் உள்ள “சியோல் அமைதி விருது மற்றும் கலாசார தளம்” (seoul peace prize cultural foundation) என்ற அமைப்பு சர்வதேச அளவில் ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக பங்களித்த ஒருவருக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை “சோல் அமைதி விருது” என்ற விருதை வழங்குகிறது. கடந்த 1990-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது தேர்வுக் குழுவில் 300 கொரிய வல்லுநர்களும், 800 சர்வதேச வல்லுநர்களும் இடம்பெற்றிருப்பார்கள்.

இதுவரை, ஐ.நா-வின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான், பான் கி மூன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் போன்ற சர்வதேச தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில், சுமார் 14,664,331 இந்திய ரூபாய் மதிப்புள்ள பணமும் கேடயமும் வழங்கப்படும். இருந்த வரிசையில் 2018 ம் ஆண்டுக்கான ‘சோல் அமைதி விருது’ இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக விருது வழங்கும் அமைப்பின் தலைவர் குவோன் இ-ஹையோக் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார். மோடி ஆதரவாளர்கள் மற்றும் ஒரு சில இந்தியர்களிடையே இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இந்த விருது பிரதமர் மோதிக்கு வழங்கப்படுவதை விரும்பவில்லை.

தென்கொரிய தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

மேலும் பல சமூக ஊடகபயன்பாட்டாளர்கள் தங்கள் எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று தென்கொரியாவில் உள்ள பல்வேறு கொரிய சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்திய பிரதமர் மோதியை சோல் அமைதி விருதுக்குத் தேர்வு செய்தது தவறான முடிவு என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆர்ப்பாட்டக்காரர்கள் “சோல் அமைதி விருது” என்பது மிகவும் புனிதமான விருது, அதைத் தகுதி இல்லாதவர்க்கு வழங்குவதை நாங்கள் ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டோம். தற்போழுது தேர்வாகி உள்ள இந்திய பிரதமர் மோதி இந்த விருதுக்கு எந்த விதத்திலும் தகுதி உடையவர் அல்ல’. பிரதமர் மோதி 2002 ல் குஜராத் முதல்வராக இருந்த பொழுது முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தில் அவரது அரசின் பங்கு மோசமானது.

அப்பொழுது நடந்த இந்து முஸ்லீம் கலவரத்தில் தான் எதையும் கண்டுகொள்ளாத காரணத்தால் அப்பாவி முஸ்லீம் மக்கள் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்” என்று கூறினர்.மேலும் அவர்கள் பிரதமர் மோதியை கொரியாவின் முன்னாள் அதிபர் சுன்-டூ-வான் அவர்களோடு ஒப்பிட்டு முழக்கமிட்டனர்.

அதிபர் சுன்-டூ-வான் என்பவர் 1980 ம் ஆண்டில் தான் அதிபராக இருந்த பொழுது நடந்த கொரிய இனப்படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மோதி அவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது கிட்டத்தட்ட அதிபர் சுன்-டூ-வான் அவர்களுக்கு வழங்கப்படும் விருதைப் போன்றதாகும் என எச்சரித்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த விருது பிரதமர் மோதிக்கு வழங்கப்பட்டால் அது மற்ற சோல் அமைதி விருது பெற்றவர்களை அவமதிக்கும் செயலாகும், எனவே உடனடியாக இந்த முடிவைப் பரிசீலிக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டனர். -BBC_Tamil

TAGS: