‘ஸ்டெர்லைட்டை மூடிய பின் காற்றில் மாசு குறைவு’

சென்னை: ‘ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின், துாத்துக்குடியில், காற்றில் கலக்கும், வேதிப்பொருட்களின் அளவு குறைந்துள்ளது’ என, தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த குழுவிடம், மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்து உள்ளது.

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய, தேசிய பசுமை தீர்ப்பாயம், நீதிபதி, தருண் அகர்வாலா தலைமையிலான குழுவை அமைத்தது. இந்தக் குழு, செப்டம்பரில், துாத்துக்குடி சென்று, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்தது. பின், துாத்துக்குடி மக்களின் கருத்துகளை கேட்டறிந்தது. அரசியல் கட்சியினரும், ஆய்வு குழுவை சந்தித்து கருத்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆய்வு குழுவின் கருத்து கேட்பு கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், சி.எஸ்.வைத்தியநாதன், ஸ்டெர்லைட் ஆலை தரப்பில், ஆரியமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், துாத்துக்குடியில் எடுக்கப்பட்ட, காற்று மாசு குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது: துாத்துக்குடியில், எட்டு இடங்களில், காற்று மாசின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அக்., 12, 13ல், எடுக்கப்பட்ட மாதிரியில், சல்பர் – டை – ஆக்சைடு, 5 மைக்ரோ கிராமிற்கு குறைவாகவும், நைட்ரஜன் – டை – ஆக்சைடு, 7 மைக்ரோ கிராமிற்கு குறைவாகவும் இருந்தது. காற்றில் உள்ள துகள்களின் அளவு, 64.9 மைக்ரோ கிராமாக இருந்தது.

அதேநேரத்தில், 2017 செப்., 22ல் எடுத்த மாதிரியில், சல்பர் – டை – ஆக்சைடு, 20 மைக்ரோ கிராம்; நைட்ரஜன் – டை – ஆக்சைடு, 15 மைக்ரோ கிராமும் இருந்தது. காற்றில் உள்ள துகள்களின் அளவு, 56 மைக்ரோ கிராமாக இருந்தது.இரு ஆய்வுகளையும் ஒப்பிடும் போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின், காற்றில் கலக்கும் வேதிப்பொருட்களின் அளவு குறைந்துள்ளது. துகள்களின் அளவு அதிகரித்ததற்கு, திறந்தவெளியில் கழிவுகள் கொட்டப்படுவதே காரணம்.இவ்வாறு, வாரிய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

-dinamalar.com

TAGS: