கீழடி அகழ்வாய்வு அறிக்கையை தயார் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல்

கீழடி முதல் இரண்டு கட்ட அகழ்வாய்வு அறிக்கையை தயார் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளோம் என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி நகரை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “கீழடியில் 2013 முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்தி வருகிறது. முதல் கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத்ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வில் 5,300-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 3-ம் கட்ட அகழாய்வுக்கு தயாராகி வந்த நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். மற்றொரு அதிகாரி தலைமையில் அடுத்த கட்ட அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தயார் செய்யக்கூடாது என்றும், பெங்களூரு தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு அறிக்கை தயாரிக்க வேண்டும் என மத்திய தொல்லியல் துறை இயக்குனர் ஜெனரல் அக். 3-ல் உத்தரவிட்டுள்ளார்.

அகழாய்வில் எடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை பெங்களூருவில் அமர்நாத் ராமகிருஷ்ணன் பாதுகாத்து வருகிறார். அந்தப் பொருட்களையும் பெங்களூர் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க அமர்நாத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2300 ஆண்டு பழமையானது ஆகும். இந்த பொருட்களின் உண்மையான காலத்தை கண்டறிய வேண்டும். உலகில் முதல் நாகரீகம் கீழடியில் இருந்ததற்கு சான்றாக இந்தப் பொருட்கள் உள்ளன.

இந்தியாவில் அசோகர் கால கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள்தான் பழமையானவை என்று வடஇந்திய அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள், செங்கற்கள் போன்றவற்றில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன.அவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது மேலும் உறுதி செய்யப்படும் நிலையில் தமிழ் பிரமி எழுத்துகளுக்கு அடுத்த இடத்துக்கு அசோகர் கால கல்வெட்டுகள் தள்ளப்படும்.

இதனால் தமிழ் கலாசாரத்தின் பழமையை மறைக்கும் நோக்கத்தில் சில அதிகாரிகளின் துணையுடன் மத்திய அரசு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

எனவே கீழடி அகழாய்வு அறிக்கை தயாரிக்க பெங்களூரு தொல்லியல் துறை கண்காணி்ப்பாளரை நியமித்து பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும் ஆய்வு அறிக்கை தயாரிக்கவும்,பழங்கால பொருட்களின் உண்மையான வயதை கண்டறிய கார்பன்டேட்டிங், டிஎல் சோதனைக்கு அனுப்பவும் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது கீழடியில் முதல் இரண்டு கட்ட அகழ்வாய்வு அறிக்கையை தயார் செய்ய அமர்நாத்ராமகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளோம் என மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார்.

கீழடியில் முதல் இரண்டு கட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கபட்ட பொருட்கள் 2300 ஆண்டுகள் பழமையானது என ஆய்வில் தெரியவந்துள்ளது எனவும், 3 ஆம் கட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கபட்ட பொருட்கள் கார்பன் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது. கார்பன் சோதனை முடிவுகள் வர ஆறு மாதங்கள் காலஅவகாசம் ஆகும் என மத்திய தொல்லியல்துறை சார்பில் கூறபட்டது.

அப்போது மத்திய தொல்லியல்துறையிடம் உள்ள கீழடி அகழ்வாய்வு அறிக்கையை தமிழக தொல்லியல்துறையிடம் கொடுக்க உத்தரவிட்டு வழக்கினை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

-nakkheeran.in

TAGS: