நாளை மீண்டும் திறக்கிறது சபரிமலை கோவில்.. 2000 போலீசார் குவிப்பு.. பாதுகாப்பு அதிகரிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் நாளை மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த மாதம் 17ம் தேதி சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது.

ஆனால் கோவிலுக்குள் ஒரு பெண் கூட கடைசி வரை நுழையவில்லை. பின் பெரும் பரபரப்பிற்கு பின் கோவில் மூடப்பட்டது.

எதிர்ப்பு தெரிவித்தனர்

ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைய கடும் எதிர்ப்பு நிலவியது. இந்துத்துவா அமைப்பினர், பாஜகவினர் பெண்கள் நுழைவிற்கு எதிராக தீவிரமாக போராடினார்கள். இந்த போராட்டம் காரணமாக சில பெண்கள் தாக்கப்பட்டனர். போலீசார் கூட தாக்கப்பட்டனர். பல வாகனங்கள் மீது மக்கள் தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்தனர். இது கேரளாவில் 5 நாட்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

எத்தனை பேர் கைது

தற்போது சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைவிற்கு எதிராக போராடியவர்களை அம்மாநில அரசு தேடி தேடி கைது செய்து வருகிறது. கேரளாவில் மொத்தம் 4000 பேர் வரை கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பத்தினம்திட்டா, திருவனந்தபுரம், கோழிக்கோடு, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் இருந்து நிறைய பேர் கைதாகி உள்ளனர். கைதானத்தில் பலர் ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள்.

நாளை மீண்டும் திறக்கிறது

இந்த நிலையில் நாளை சபரிமலை கோவில் மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட உள்ளது. இதற்காக பக்தர்கள் இப்போதே நிலக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் குவிந்து இருக்கிறார்கள். தொடர்ந்து இடிமுடி கட்டிய பக்தர்கள் அந்த பகுதியை நோக்கி சென்று வருகிறார்கள்.

பாதுகாப்பு

சபரிமலை கோவில் நாளை மீண்டும் திறக்கப்பட இருப்பதால் கோவிலுக்கு முன் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். தற்போது சபரிமலை கோவில் முன் போலீஸ் குவிக்கப்பட்டு வருகிறது. 2000 கேரள போலீசார் முதற்கட்டமாக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்று மாலை சிறப்பு படை அங்கு குவிக்கப்பட உள்ளது.

tamil.oneindia.com

TAGS: