பெரோஸ்பூர்: இந்திய எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலிகள், சாலைகள் குறித்த விபரங்கள், புகைப்படங்கள், உயரதிகாரிகளின் மொபைல் எண்கள் ஆகியவற்றை பாகிஸ்தான் உளவாளியிடம் பகிர்ந்த பிஎஸ்எப் வீரரை போலீசார் கைது செய்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் லதூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் ரியாசுதீன். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவரது நடவடிக்கைகளில் பிஎஸ்எப் புலனாய்வு பிரிவினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவரை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஏஜென்ட் மிர்சா பைசல் என்பவரிடம், இந்திய எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலிகள் மற்றும் சாலைகள் குறித்த புகைப்படங்கள், மூத்த அதிகாரிகளின் மொபைல் எண்கள் மற்றும் சில ரகசிய தகவல்களை பரிமாறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சட்டம்
இதனையடுத்து பிஎஸ்எப் உயர் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், மம்தாத் போலீசார், ஷேக் ரியாசுதீனை கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர், தனது மொபைல் போன் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆப் மூலம் தகவல்களை பரிமாறியுள்ளார். அவர் மீது, அலுவலக ரகசிய சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-dinamalar.com