சென்னை கிண்டியில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா நிறுவனத்தில் திடீர் சோதனை சாமி ஊர்வல வாகனங்கள், சிலை பறிமுதல்

ஆலந்தூர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ரன்வீர்ஷா வீட்டில் சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதை தொடர்ந்து அவரது தோழியும், பெண் தொழில் அதிபருமான கிரண்ராவ் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான சாமி சிலைகள், பழமையான தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிலை கடத்தல் தொடர்பாக ஏற்கனவே கைதான தொழில் அதிபர் தீனதயாளனிடம் இருந்து ரன்வீர்ஷா சிலைகளை வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் சென்னை அருகே, ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான 2 பண்ணை வீடுகளிலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்த சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மொத்தம் 244 சிலைகள் மற்றும் கல் தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே தொழில் அதிபர்கள் ரன்வீர்ஷாவும், கிரண்ராவும் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் அவர்களுக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து இருவரும் தலைமறைவாக உள்ளனர். இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகில் உள்ள ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், துணை சூப்பிரண்டு சுந்தரம் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் சாமி சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் மரத்தால் ஆன நந்தி, கருடன் உள்ளிட்ட 5 வாகனங்களும், சிவலிங்க சிலையும் பறிமுதல் செய்யப்பட்டன. தங்களிடம் உள்ள சிலைகளுக்கு ஆவணங்கள் இருப்பதாக ரன்வீர்ஷா தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு போலீசார் அளித்த பதிலில், “மிகவும் தொன்மையான சிலைகளை வாங்கி வைத்திருப்பது குற்றம். அதை விற்பனை செய்வதும் குற்றம் ”என தெரிவித்து இருந்தனர்.

இந்த சோதனை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை சூப்பிரண்டு சுந்தரம் கூறியதாவது:-

ரன்வீர்ஷா வீடு மற்றும் பண்ணை வீடுகளில் இருந்து 244 பழமையான சிலைகள் ஏற்கனவே கைப்பற்றப்பட்டன. கிண்டியில் உள்ள அவரது அலுவலகத்தில் சாமி சிலைகள், ஊர்வல வாகனங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்து. இதையடுத்து அங்கு சோதனை செய்யப்பட்டது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட சாமி ஊர்வல வாகனங்கள் தொன்மையானது. இந்த வாகனங்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து கோர்ட்டு உத்தரவை பெற்று சோதனை நடத்தினோம்.

இவை 500, 600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ரன்வீர்ஷாவிடம் சிலைகளுக்கான முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. சிலை கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக ரன்வீர்ஷா, கிரண்ராவ் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக ரன்வீர்ஷா தரப்பை சேர்ந்த தங்கராசு கூறுகையில், ‘சாமி ஊர்வல வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. இந்த வாகனங்கள் தொன்மையானது அல்ல’ என்றார்.

-dailythanthi.com

TAGS: