சபரிமலை சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் காவலர்கள்

பம்பா : சபரிமலை அய்யப்பன் கோயில் சன்னிதானத்தில் முதல் முறையாக பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை அடுத்து சமீபத்தில் மாதாந்திர பூஜைக்காக அய்யப்பன் கோயில் நடைதிறக்கப்பட்ட போது சில பெண்கள் கோயிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால் பக்தர்களின் தீவிர போராட்டம் காரணமாக அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தீர்ப்பை எதிர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நவம்பர் 11 ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோயிலில் இன்று மாலை மீண்டும் நடைதிறக்கப்பட உள்ளது. பாதுகாப்பு கருதி 1500 க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இன்றும் பெண் பக்தர்கள் வந்தால் போராட்டம் நடத்தப்படலாம் என்பதால் சன்னிதானம் பகுதியில் முதல்முறையாக பெண் காவலர்கள் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 50 வயதிற்கு மேற்பட்ட 15 பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

-dinamalar.com

TAGS: