தாஜ் மஹால் மசூதியில் தொழுகை நடத்த தடை

ஆக்ரா : உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹால் வளாக மசூதியில், வெள்ளிக் கிழமை தவிர, மற்ற நாட்களில் தொழுகை நடத்த, இந்திய தொல்லியல் துறை தடை விதித்துள்ளது.

உ.பி., மாநிலம் ஆக்ராவில், யமுனை நதிக்கரையில், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் அமைந்துள்ளது. உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும், தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர், தாஜ் மஹாலுக்கு வருகின்றனர். தாஜ் மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணியர், இங்குள்ள மசூதிக்கு செல்லவும், தொழுகை நடத்தவும், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வார விடுமுறை நாளான வெள்ளிக் கிழமை மட்டும், தாஜ் மஹால் வளாகத்தில் உள்ள, மசூதியில், உள்ளூர் முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அன்று இந்தியர் அல்லாதவர்களுக்கு அனுமதியில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தவிர, மற்ற நாட்களில் மசூதியில் தொழுகை நடத்த, இந்திய தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. மேலும், இமாம் மற்றும் மசூதி ஊழியர்கள், வெள்ளிக்கிழமை மட்டும் வந்தால் போதும் என்றும் கூறியுள்ளது. இதற்கு, மசூதியின் இமாம், சையத் சாதிக் அலி குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

-dinamalar.com

TAGS: