புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை உயரும் என்பதால், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்க மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அந்த நாட்டிடம் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது. நவ.,4ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் மிரட்டல் விடுத்தது. இருப்பினும், இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்க முடிவு செய்தது. இந்நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்த தடையில் இருந்து விலக்கு அளித்து அமெரிக்கா அறிவித்துள்ளது.
பிடி இறுகும்:
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியதாவது: இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் மீது தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விவகாரத்தில், மெதுவாக பிடியை இறுக்க முடிவு செய்துள்ளேன். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடாது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலும் முடக்கவே முதலில் முடிவு செய்தேன். ஆனால், இதனால், சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் ஏற்படும் இதனால், சில நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-dinamalar.com