தமிழில் கேள்வி தயாரிக்க பேராசிரியர்களே இல்லையா… டிஎன்பிஎஸ்சிக்கு சீமான் கேள்வி!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தமிழிலே வினாக்கள் கேட்கப்படாது என அறிவித்திருப்பது வெளிமாநிலத்தவர்களுக்கு வாசல்திறந்துவிட்டுத் தமிழர்களைப் புறந்தள்ளும் பச்சைத்துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெனது கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழக அரசுத்துறைப் பணிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வுசெய்யும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் தொகுதிப் பணிகளுக்கானத் தேர்வுகள் சிலவற்றைத் தமிழில் எழுத முடியாது எனத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி செயலாளரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு கிராமப்புற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற நவம்பர் 11-ந்தேதி நடைபெறவிருக்கிற இரண்டாம் தொகுதித் தேர்வாணையத் தேர்வுகளைத் தமிழகம் முழுவதும் 6 இலட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் எழுதவிருக்கின்றனர். இவற்றில் 23 துறைகளுக்கு நடைபெறவிருக்கிறத் தேர்வில் சமூகவியல், அரசியலறிவியல் உள்ளிட்டப் பல வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என அறிவித்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

வெட்கக்கேடானது

தமிழ்வழியில் படித்தப் பட்டதாரிகளின் மனங்களில் இது பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் காரணம் கற்பிக்க முயலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார், தமிழில் வினாத்தாள் தயாரிக்கப் பேராசிரியர்கள் இல்லை, வடிவமைப்பாளர்கள் இல்லை எனக் கூறியுள்ளது வெட்கக்கேடானது. இத்தகையப் பதிலைத் துளியும் கூச்சமற்று பொதுவெளியில் அறிவிப்பாக வெளியிடுவதைப் போன்ற இழிவு தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் வேறில்லை.

சிறுபிள்ளைத்தனமானது

இங்கிலாந்து நாட்டின் ஒரு மாகாணத்தில் நடக்கிறத் தேர்வில் தமிழில் வினாக்கள் தயாரிக்கப் பேராசிரியர்கள் இல்லையென்று கூறினால் அது ஏற்பினை உடையது. அங்கு ஆங்கிலத்தில் வினாத்தாள்கள் வழங்கப்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என ஏற்கலாம். ஆனால், எட்டுகோடித் தமிழர்கள் நீடித்து நிலைத்து வாழ்கிறத் தாய்த்தமிழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் இல்லாததால் தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்க இயலாது எனக் கூறுவது சிறுபிள்ளைத்தனமானது.

மோசடியான செயல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கையாலாகாத்தனத்தை இது வெளிக்காட்டுவதாகும். பொதுவாக வினாத்தாள்கள் தமிழுக்கொன்று, ஆங்கிலத்திற்கொன்று எனத் தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாகத் தயாரிக்கப்பட்டு பிற மொழியில் மொழிபெயர்ப்புதான் செய்யப்படுகிறது. அதனைச் செய்யக்கூடத் தமிழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் இல்லை என்பதைப் போன்றவொருத் தோற்றத்தை இவர்கள் உருவாக்க முனைவது பெரும் மோசடிச்செயல்.

தமிழர்கள் புறந்தள்ளப்படுவார்கள்

மண்ணின் மைந்தர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கி அதன்மூலம் அவர்களது பொருளாதாரத்தை உயர்த்தி நிறைவான வாழ்க்கையினை அவர்களுக்கு அமைத்துத் தருவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது உருவாக்கப்பட்டதற்குரிய நோக்கத்தையே முழுமையாகச் சிதைக்கும்விதமாக அந்நிய மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்களும்கூட இப்போட்டித் தேர்வில் பங்கேற்கலாம் என அரசு அறிவித்து, அதற்கேற்றார் போல விதிகளில் திருத்தம் கொண்டு வந்திருக்கிற நிலையில் தற்போது ஆங்கிலத்திலேயே வினாத்தாள்கள் வழங்கப்படும் என அறிவித்திருப்பது தமிழர்களைப் புறந்தள்ளி முழுக்க முழுக்க வெளிமாநிலத்தவர்களுக்கு வாசல்திறந்துவிடுகிறப் பச்சைத்துரோகமாகும்.

நிர்வாகத் தோல்வி

அமைச்சர்கள், குடிமைப்பணி அதிகாரிகள் எனப் பலரைக் கொண்டு நன்கு கட்டமைக்கப்பட்டு நிர்வாகம் செய்யும் ஓர் அரசாங்கம், தேர்வுக்கான வினாத்தாள்களை மொழிபெயர்ப்பு செய்ய இயலவில்லை எனக் கூறி அம்மண்ணின் மக்களின் மொழியைப் புறக்கணிப்பு செய்வது என்பது மிகப்பெரும் நிர்வாகத் தோல்விக்கான வெளிப்படையானச் சான்று. ஆங்கிலத்தில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தமிழிலே மொழிபெயர்ப்பு செய்வது என்பது அவ்வளவு கடுமையான காரியமுமல்ல! அதனைச் செய்வதற்குரிய தகுதிநிறைந்தப் பேராசிரியர்கள் தமிழகத்தில் இல்லாமலும் இல்லை.

அநீதி

உண்மையிலேயே, அரசிற்கு அது கடினமானக் காரியமாக இருக்கிறதென்றால் நாம் தமிழர் கட்சி அதனைச் செய்வதற்குரியத் தகுதிபடைத்தப் பேராசிரியர்களை அரசிற்குத் தரத் தயாராக இருக்கிறது. அவர்களைக் கொண்டு தமிழிலே வினாத்தாள்களைத் தயாரித்துக் கொள்ளட்டும். அதனைவிடுத்து, ஆடத்தெரியாதவர் மேடை கோணலாக இருக்கிறதெனக் கூறியக் கதையாய் கூறுகிற உப்புசப்பில்லாத வாதத்தை ஒருநாளும் ஏற்க முடியாது. ஆங்கிலத்தில் வினாத்தாள்களை வழங்கும் இம்முடிவு மிகுந்த உள்நோக்கமுடையது; தனியார் நிறுவனங்களுக்கு வணிகரீதியான இலாபத்தை ஈட்டித்தரும் சதிச்செயலை உடையது. இதன்மூலம் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு அவர்களுக்குரிய வேலைவாய்ப்புகள் யாவும் அந்நியர்களுக்குச் சென்று சேருகிற அபாயமிருக்கிறது. எனவே, இவ்வறிப்பானது மண்ணின் மக்களானத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

போராட்டத்தில் இறங்குவோம்

ஆகவே, தமிழக அரசானது உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு தமிழிலேயே வினாத்தாள்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும் எனவும், அதுவரைத் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை, அதனைச் செய்ய மறுத்து தமிழர்களுக்கு அநீதி இழைக்க முனைந்தால் மாணவர்களையும் பெரும் இளையோர் கூட்டத்தையும் திரட்டி போராட்டங்களை முன்னெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: