தீபாவளி பட்டாசு: கடந்த ஆண்டை விட காற்று, ஒலி மாசு குறைவு

தீபாவளி திருநாளின்போது சென்னை நகரத்தில் பட்டாசு வெடிப்பதன் காரணமாக உருவாகும் காற்று மற்றும் ஒலி கடந்த அண்டைவிட இந்த ஆண்டு மிகவும் குறைந்து காணப்பட்டது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கை கூறுகிறது.

பட்டாசு மூலமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக பட்டாசு வெடிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் காலை 6-7 மணி வரை மற்றும் மாலை 7-8மணி வரை, என இரண்டு மணி நேரம் ஒதுக்கியதால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுவது குறைந்துள்ளது என மாசு அளவுகளை கணக்கிட்ட அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனர்.

தலைநகர் சென்னையில் ஐந்து இடங்களில் தீபாவளி நாளுக்கு முந்தைய ஏழு நாட்கள் மற்றும் தீபாவளி அன்றும், தீபாவளிக்கு அடுத்து வரும் ஏழு நாட்களுக்கும் காற்று மற்றும் ஒலி மாசு அளவுகள் கண்காணிக்கப்படும் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தயாரிக்கப்பட்ட அறிக்கையில் தீபாவளிக்கு முந்தைய ஏழு நாட்கள் மற்றும் தீபாவளி அன்று ஏற்பட்ட மாசு அளவுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு சென்னையில் ஐந்து இடங்களில் நுண்துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டு இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு ஒரு கன மீட்டருக்கு 100 மைக்ரோகிராம் என்ற அளவில் இருக்கவேண்டும். தீபாவளி நாளன்று மிதக்கும் நுண் துகள்கள் 48 முதல் 114 மைக்ரோகிராமாக ஆக இருந்தது. சௌகார்பேட்டை கண்காணிப்பு நிலையத்தில் மட்டும் அந்த அளவு கூடுதலாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த நுண்துகள்களின் அளவானது கனமீட்டருக்கு 387 முதல் 777 மைக்ரோகிராம் என்ற அளவில் இருந்தது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல வளிமண்டல ஒளி மாசுபாட்டின் அளவு தீபாவளிக்கு முன் 58ல் இருந்து 75 டெசிபல் அளவில் இருந்தது. தீபாவளி அன்று 68ல் இருந்து 89டெசிபல் அளவில் இருந்தது என்று கூறப்பட்டுள்ளது. ஒலி மாசுபாட்டை பொறுத்தவரை அதிக பட்சமாக 65 டெசிபலும், குறைந்தபட்சம் 45 டெசிபலும் இருக்கலாம். ஆனால் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சத்தம் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச அளவை விட அதிமாக இருந்தது என்கிறார்கள் அதிகாரிகள்.

தற்போது சென்னை நகரத்தின் காற்று மற்றும் ஒலி மாசு அளவுகள் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறும் அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பதிவான மாசுபாடு குறித்த விரிவான அறிக்கை அடுத்த ஏழு நாட்கள் பதிவாகும் அளவுகளை எடுத்த பின்னர் வெளியிடப்படும் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

காற்று மற்றும் ஒலி மாசு குறைந்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், பொது மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போலவே அரசு விழாக்கள் மற்றும் அரசியல்தலைவர்களின் நிகழ்ச்சிகளின்போதும் பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் அருள்செல்வம்.

தீபாவளி பட்டாசு வெடிக்கும் மக்கள்

”இந்த ஆண்டு மாசுபாடு குறைந்துள்ளது என்பது பாராட்டுக்கு உரியது. உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பு அதற்கு முக்கிய காரணம். அடுத்ததாக மக்களிடம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசு ஏற்பட்டு சுவாசிக்க மக்கள் சிரமப்படுவதை பலரும் அறிந்துள்ளனர். காற்று மாசுபட்டால் நுரையீரல் புற்றுநோய் எளிதில் ஏற்படும் என்ற பயம் பராவலாக உள்ளது. பள்ளிக்கூடங்களில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு போன்றவை இந்த ஆண்டு தீபாவளி அன்று மாசுபாட்டை குறைத்துள்ளது,”என்கிறார் அருள்செல்வம்.

”அரசாங்க விழாக்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் மற்றும் பிற வழிபாட்டு தளங்களில் பட்டாசு வெடிப்பது, அரசியல்தலைவர்களின்

பாராட்டு விழாக்கள், அரசியல் கட்சி விழாக்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை கொண்டுவரவேண்டும். அதைவிட, பொதுமக்களுக்கு போதனை செய்யும் அரசியல்தலைவர்கள் இந்த கட்டுப்பாடுகளை தங்களாவே முன்வந்து செயல்படுத்தினால், இனிவரும் ஆண்டுகளிலும் மாசுபாடு குறையும்,” என்கிறார் அருள்செல்வம். -BBC_Tamil

TAGS: