மும்பை: சர்வதேச அளவில், மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான், அதிகளவு பெண் விமானிகள் பணிபுரிவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச பெண் விமானிகள் சங்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில், பெண் விமானிகளின் எண்ணிக்கை 5.4 சதவீதமாக உள்ளது. ஆனால் இது, இந்தியாவில் 12.4 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் பணிபுரியும் 8,797 விமானிகளில் 1,092 பேர் பெண்கள். இவர்களில் 385 பேர் கேப்டன்களாக உள்ளனர். சர்வதேச அளவில், 1.5 லட்சம் விமானிகளில் 8,061 பேர் பெண்கள். இதில், 2,190 பேர் கேப்டன்களாக உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவில்,டில்லியை சேர்ந்த ஜூம் விமான நிறுவனம், தனது நிறுவனத்தில் 30 சதவீத பெண்களை விமானிகளாக பணியமர்த்தியுள்ளது. இங்கு விமானிகளாக தேர்வு செய்யப்படும் 30 பேரில் 9 பேர் பெண்கள். இதற்கடுத்த இடங்களில் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் உள்ளன. இண்டிகோ நிறுவனத்தில் 2,689 விமானிகளில் 351 பேர்(13.9%) பெண்கள்.ஜெட் ஏர்வேசில் 1,867 விமானிகளில் 231 பேர்(12.4 %) பெண்கள். ஸபைஸ் ஜெட்டில் உள்ள 853 விமானிகளில் 113 பேர் (13.2%) பெண்கள். ஏர் இந்தியாவில் உள்ள 1,710 விமானிகளில் 217 பேர் (12.7%) பெண்கள் ஆவார்கள். அமெரிக்க விமான நிறுவனங்களை விட இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களில் தான் அதிகளவு பெண் விமானிகள் பணிபுரிகின்றனர்.
-dinamalar.com